கோலாலம்பூர், ஆக.25-
பி.கே.ஆரில் இரண்டு ஆண்டுகளுக்கு மாணிக்கவாசகம் உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக பி.கே.ஆர். அறிவித்துள்ளதைத் தொடர்ந்து அனேகன்.கோம் இணையத்தள பதிவேடு அவரை தொடர்பு கொண்டு வினவியது.

தன்னுடைய இந்த தகுதி நீக்கத்தை உறுதிபடுத்திய மாணிக்கவாசகம் இதற்கு பின்னால் சிலரது சதிகள் உள்ளதாக கூறினார். காப்பாரிலுள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்திலுள்ள முருகன் சிலை திறப்பு விழாவில் கலந்துக்கொள்ளும்படி எனக்கு அழைப்பு கிடைத்தது. காப்பார் நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் என்ற அடிப்படையில் நானும் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு அந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டேன்.

அப்போது அந்த ஆலயத்தின் நிர்வாகத்தினர்கள் என்னை உரையாற்றும்படி அழைத்த போது நானும் உரையாற்றுவதற்கு தயாரானேன். அப்போது அங்கு குடிபோதையில் வந்திருந்த 4 இந்தியர்கள் நான் எதற்காக காப்பார் நாடாளுமன்ற தொகுதியிலிருந்து கோலசிலாங்கூரிலுள்ள மெலாவாத்தி சட்டமன்ற தொகுதிக்கு மாறி சென்றேன் என கேள்வியெழுப்பினர். நான் ஓம்ஸ் தியாகராஜன், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆகியோரிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு மாறி சென்றதாக குற்றம் சாட்டினர். அவர்கள் கூறியதைத்தான் நான் அந்நிகழ்ச்சியில் தெரிவித்தேன். மாறாக, அன்வார் மீது நான் ஒரு போதும் குற்றம் சாட்டவில்லை. அதோடு, என் மீதான இக்குற்றச்சாட்டை மெலாவாத்தியிலுள்ள ஒரு கிளையைச் சேர்ந்த மலாய்க்காரர் பி.கே.ஆர். தலைமையகத்தில் புகார் அளித்திருக்கிறார்.

ஒரு மலாய்க்காரரான அவர் எப்படி காப்பார் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் நிகழ்ந்ததை பற்றி புகார் அளிக்க முடியும்? இத்தணைக்கும் நான் தமிழில்தான் பேசினேன். அதுவும் அக்கருத்து சம்பந்தப்பட்ட 4 இந்திய ஆடவர்கள் கூறியதே தவிர நானாக கூறவில்லை. ஆனால், நான் அந்நிகழ்ச்சியில் பேசியதை சிலர் பதிவு செய்து சமூகவலைத்தளங்களில் பரப்பியுள்ளனர். இது குறித்து பி.கே.ஆர். தலைமையகமும் என்னிடம் முன்கூட்டியே விளக்கம் பெறாமல் தகுதி நீக்கம் செய்துள்ளது வேதனையளிக்கிறது.

வருகின்ற திங்கள்கிழமை பி.கே.ஆர். தலைமையகத்தில் என்னுடைய உறுப்பினர் தகுதி நீக்கம் குறித்து மேல்முறையீடு செய்வேன். அதன் பிறகு என்ன நடக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என மாணிக்கவாசகம் கூறினார்.