குணா,சாமிநாதன் கைது விவகாரம்; நீதிமன்றத்தில் உண்மை தெரிய வரும் –அமைச்சர் வேதமூர்த்தி

0
2

மலாக்கா, அக்.13-

சட்டமன்ற மக்கள் பிரதிநிதிகளான பி.குணாவும்  சாமிநாதனும் சமூக சேவையிலும் மேம்பாட்டுப் பணியிலும் அக்கறை கொண்டவர்கள். அப்படிப்பட்ட இருவரும், விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை மலாக்காவில் நடைபெற்ற மலேசிய முன்னேற்றக் கட்சிக் கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.

“குணாவை ஆரம்பத்திலிருந்தே நான் நன்கு அறிவேன். எளிய மக்கள்மீதும் பாட்டாளிவர்க்கத்தினர்மீது  அதிக அக்கறைக் கொண்டவர். மக்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால், இரவு பகல் பாராமல் இனம்-மொழி பாகுபாடு இன்றி சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து மக்கள் நலப் பணி ஆற்றுபவர்.  அப்படிப்பட்ட ஜனநாயக அரசியல்வாதியான குணா, தீவிரவாத நடவடிக்கையில் தொடர்பில்லாதவர் என நிரூபிக்கப்பட்டு, வழக்கம்போல தன் அரசியல் பயணத்தைத் தொடர்வார் என்று நம்புகிறேன். எது எவ்வாறாயினும் நீதிமன்றத்தில் உண்மை தெரியவரும் என ஏறக்குறைய 500 பேர் திரண்டிருந்த அந்தக்  கூட்டத்தில் பேசியபோது  அவர் குறிப்பிட்டார்.

அதைப்போல, மலாக்கா ஆட்சிமன்ற உறுப்பினர் சாமிநாதனும் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு, மீண்டும் மக்கள் நலப் பணியை  வழக்கம்போல தொடர்வார் என்று நம்புவதாக அவர் கூறினார்.

‘மலாக்கா ஹெங் எண் சங்க’ கட்டடத்தில் ‘எம்.ஏ.பி.யுடன்  மலேசிய இந்தியர்களின் எதிர்காலம்’ என்னும் கருப்பொருளுடனும் இந்திய மக்களை வலுப்படுத்தும் நோக்கத்துடனும் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் பேசிய தேசிய  ஒற்றுமைத் துறை அமைச்சருமான வேதமுர்த்தி மேலும் சொன்னார்.