வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இந்தோனேசியாவில் சாதனை
சமூகம்முதன்மைச் செய்திகள்

மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இந்தோனேசியாவில் சாதனை

ஜகார்த்தா, அக்டோபர் 14-

ஜகார்த்தா, இந்தோனேசியாவில் நடைபெற்ற அறிவியல் புத்தாக்க போட்டியில் கலந்து கொண்ட மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வெள்ளிப் பதக்கத்தை வென்று பள்ளிக்கும் நாட்டிற்கு பெருமை சேர்ந்தள்ளனர்.

இம்மாதம் 8ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் 25 நாடுகளிலிருந்து 250 பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களைச் சேர்ந்த 18 வயதிற்குட்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் தங்களது படைப்பினை மிகச் சிறப்பான முறையில் நீதிபதிகளிடம் விளக்கியதோடு, அவர்கள் படைத்த படைப்பினை நிகழ்விற்கு வந்தவர்களிடமே விற்றுத் தீர்த்ததாக அவர்களுக்கு பயிற்சி வழங்கிய ஆசிரியர் திருமதி கு.வனிதா தெரிவித்தார்.

சமந்தா, தேசன், யர்சன், சர்வேந்தன் மற்றும் ஷர்மினி ஆகியோருக்கு இப்போட்டிக்காக கடந்த 3 மாதங்களாக பயிற்சிகள் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

இந்தப் போட்டி குறித்து, அப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி ச.தெய்வமணி கூறுகையில், பள்ளியின் மேலாளர் வாரியம் மாணவர்கள் இப்போட்டிக்கு சென்று வருவதற்கான அனைத்து செலவீனங்களையும் ஏற்றுக் கொண்டதாக அவர் தெரிவித்தார். இது போன்ற அனைத்துலக போட்டிகளில் பள்ளி மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பள்ளியின் முன்னேற்றத்திற்காக பள்ளியின் மேலாளர் வாரியம் பல உதவிகளை வழங்கி வருவதாகவும் மாணவர்கள் கல்வி மற்றும் விளையாட்டுத் துறைகளில் மேம்படுவதற்காக பல முயற்சிகளி மேற்கொண்டு வருவதாகவும் பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் திரு.கா.உதயசூரியன் தெரிவித்தார்.

பள்ளியின் வளர்ச்சிக்காக எப்போதும் உறுதுணையாக இருக்கும் பள்ளி மேலாளர் வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், Dr.டேவிட், பள்ளி நிர்வாகம், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் திருமதி ச.தெய்வமணி தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன