கோலாலம்பூர், அக். 16-

பாட்டாளி மக்களின் ஏற்றமிகு எதிர்காலத்திற்காக தமது இறுதி மூச்சுவரை பாடுபட்ட உன்னத மனிதர் செனட்டர் டத்தோ எம். சம்பந்தன் இயற்கை எய்தினார்.

அவர் காலமானார் என்ற செய்தி அவரது கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி இந்நாட்டு மக்களையும் வெகுவாக பாதித்துள்ளது. தேசிய முன்னணி தலைவர்கள், உறுப்புக் கட்சிகளின் தலைவர்கள், கட்சி உறுப்பினர்கள் அனைவரும் டத்தோ சம்பந்தனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

1988ஆம் ஆண்டு ஐபிஎப் கட்சியின் தோற்றுநரும் தலைவருமாகிய டான்ஸ்ரீ பண்டிதன் மலேசிய இந்திய காங்கிரசில் இருந்து வெளியேறி புதிய கட்சியை தொடங்கியதிலிருந்து அக்கட்சியின் மேம்பாட்டிற்காக பாடுபட்டவர் டத்தோ சம்பந்தன்.

மாநில இளைஞர் பகுதியில் இணைந்து பணியாற்றியவர் பின்னாளில் அதன் தலைவராகவும் பொறுப்பேற்றார். 1995ஆம் ஆண்டு அக்கட்சியின் தேசிய இளைஞர் பகுதி தலைவராக பொறுப்பேற்ற அவர் டான்ஸ்ரீ பண்டிதன் மரணமடைவதற்கு முன்னதாக அக்கட்சியின் உதவி தலைவர் ஆனார்.

கட்சியில் குழப்பங்கள் பிரிவினைகள் வந்தபோதும் புவான் ஸ்ரீ ஜெயஸ்ரீ பண்டிதனுடன் இணைந்து கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட அவர் 2010 ஆம் ஆண்டு அக்கட்சியின் தேசிய தலைவராக பொறுப்பேற்றார்.

டான்ஸ்ரீ பண்டிதன் இக்காட்சியை எப்படி வழிநடத்தினாரோ அதே பாணியில் மீண்டும் ஐபிஎப் கட்சிக்கு அடையாளம் தந்தவர் டத்தோ சம்பந்தன். டான்ஶ்ரீ பண்டிதனுக்கு பிறகு ஐபிஎப் கட்சிக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப், செனட்டர் பதவியை டத்தோ சம்பந்தனுக்கு வழங்கினார்.

இந்நாட்டிலுள்ள பாட்டாளி மக்களின் கல்வி, பொருளாதார மேம்பாட்டிற்கு தொடர்ந்து பாடுபட்ட தலைவர்களில் டத்தோ சம்பந்தனும் இடம்பிடித்து இருக்கின்றார். அவர் இந்தப் பூவுலகை விட்டு பிரிந்தாலும் கட்சித் தொண்டர்கள் மட்டுமின்றி மலேசிய மக்கள் மனதில் என்றும் நினைத்திருப்பார்.

டத்தோ சம்பந்தனின் மறைவில் மீளா துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தாருக்கும் கட்சி உறுப்பினருக்கும் அநேகன் குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.