வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > செனட்டர் டத்தோ எம். சம்பந்தனின் மறைவு அதிர்ச்சியை அளிக்கிறது –டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

செனட்டர் டத்தோ எம். சம்பந்தனின் மறைவு அதிர்ச்சியை அளிக்கிறது –டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர், அக்டோபர் 16-

இந்தியர்களிடையே நல்லுறவைக் பேணிக் காக்கும் வகையில், துணிச்சலாகக் குரல் கொடுத்து வந்த இந்தியர் முற்போக்கு கட்சியின் தேசியத் தலைவர் செனட்டர் டத்தோ எம். சம்பந்தனின் மறைவு ஆழ்ந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது என மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்நாட்டிலுள்ள இந்திய இனத்தின் மானம் காக்கவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகவும் குரல் கொடுத்து ஒரு போராளியாக செயல்பட்டவர் டத்தோ சம்பந்தன். மறைந்த டத்தோ எம்.பண்டிதன் அக்கட்சியின் தேசியத் தலைவராக இருந்த காலக்கட்டத்தில், அவருக்கு உற்றத் தோழனாகவும், அவரது அரசியல் வாழ்க்கையின் தீவிர ஆதரவாளராகவும், அவரது இலட்சியங்களுக்கு உறுதுணையாகவும்,  அவரது இறுதி மூச்சுவரை உடனிருந்து பாடுபட்டவர் டத்தோ சம்பந்தன்.

ஒரு சாதாரண மனிதரக இருந்த செனட்டர் டத்தோ எம். சம்பந்தன் அவர்களின் பலவகையான போராட்டங்களின் வழி தன்னையும், தன்னைச் சார்ந்த கட்சியையும் உயர்த்தியதால்தான், அரசு அவரை அங்கீகரித்து, டத்தோ விருது வழங்கியதுடன், பின்னர் செனட்டர் பதவியையும் வழங்கியதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தாம் வெளியிட்ட இரங்கல் செய்தியில் தெரிவித்தார்.

இந்தியர் முற்போக்குக் கட்சியை ஓர் உயர்ந்த நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்திலும், தேசிய முன்னணியில் இக்கட்சியை ஓர் உறுப்புக் கட்சியாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலும் அவர் நடத்திய போராட்டங்கள் அனைத்தும் மறக்க முடியாதது. மேலும், பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் நன்மதிப்பைப் பெற்றவராக விளங்கிய இவர், ஒட்டுமொத்த இந்தியர்களின் மேம்பாட்டுக்காகவும், வளர்ச்சிக்காகவும் பல நிலைகளில் துணிந்து குரல் கொடுத்து வந்துள்ளார் என்று அவர் குறிப்பிட்டார்.

அன்னாரைப் பிரிந்து துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலை மலேசிய இந்தியர் காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்வதாக நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன