முகப்பு > மற்றவை > பணத்தை வாங்கி கொண்டு தே.முவை நிராகரியுங்கள்! துன் டாக்டர் மகாதீர்
மற்றவைமுதன்மைச் செய்திகள்

பணத்தை வாங்கி கொண்டு தே.முவை நிராகரியுங்கள்! துன் டாக்டர் மகாதீர்

கோலாலம்பூர், ஆக. 25-
வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தலுக்காக அம்னோ, தேசிய முன்னணியைச் சேர்ந்தவர்கள் பணம் அல்லது இலவசங்களை வழங்கினால் அதனை வாங்கிக் கொண்டு அக்கூட்டணியை மக்கள் நிராகரிக்க வேண்டுமென முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் வலியுறுத்தினார்.

அக்கூட்டணிக்கு பதிலாக மக்கள் தனது தலைமையிலான நம்பிக்கை கூட்டணிக்கு வருகின்ற பொதுத்தேர்தலில் வாக்களிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார். லங்காவியில் என்னை சந்தித்த மக்கள் எதிர்கட்சிக்கு வாக்களிக்க விரும்புவதாக தெரிவித்தனர். முன்கூட்டியே தங்களது முடிவுகளை அறிவித்தால் பிறகு பிரச்னைகள் வரும். இலவசமாக கிடைப்பது கூட கிடைக்காமல் போகலாம் என்ற அச்சத்தில் அவர்கள் இரகசியமாக என்னிடம் இதனை தெரிவித்தனர். தேசிய முன்னணி இலவசங்களை வழங்கினால் அதனை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு வாக்களிப்பதாக கூறுவோம். ஆனால், உண்மையில் நம்பிக்கை கூட்டணிக்குத்தான் வாக்களிப்போம் என அவர்கள் கூறியதாக துன் மகாதீர் கூறினார்.

தேசிய முன்னணி கொடுக்கும் பிரிம் உதவித் தொகையை வாங்கி கொள்ளுங்கள். ஆனால், தேசிய முன்னணிக்கு வாக்களிக்க வேண்டிய கட்டாயம் மக்களுக்கு இல்லை. அவர்கள் தவறுகளை செய்துள்ளது அவர்களே நன்றாக தெரியும். தவறு செய்யாதவர்கள் வெற்றிபெறுவதற்காக பணம் கொடுக்க வேண்டிய தேவையில்லை.

மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை அவர்களால் கண்டறிய முடியாது. மக்களை மிரட்டுவதற்காக அவர்கள் அவ்வாறு கூறக்கூடும். ஆனால், அது சுத்த பொய். நான் கூறுவதை நீங்கள் நம்பாவிட்டால் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவரான டான்ஸ்ரீ அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மானிடம் கேளுங்கள். ஆளும் கட்சிக்கு பயந்து விடாமல் நம்பிக்கை கூட்டணிக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டுமென துன் மகாதீர் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன