கோலாலம்பூர்,ஆக.26 –

2017 சீ விளையாட்டுப் போட்டியில் ஆடவர்க்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் குறிசுடுதல் போட்டியில் மலேசியாவின் ஜோனதன் வோங், ஒலிம்பிக் வெற்றியாளரான வியட்நாமின் ஹோங் சுவான் வின்னைத் தோற்கடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

சுபாங்கில் உள்ள குறிசுடும் தளத்தில் நடைபெற்ற போட்டியில் 25 வயதுடைய ஜோனதன் வோங் 238.30 புள்ளிகளைப் பெற்ற வேளையில் சுவான் வின் 234.10 புள்ளிகளை மட்டுமே பெற்றார்.

40 வயதுடைய சுவான் வின் கடந்த ஆண்டில் பிரேசில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடதக்கது.

இந்தப் போட்டியில் மியான்மாரின் கியாவ் சுவார் வின் , வெண்கலப் பதக்கம் வென்றார்
ஒலிம்பிக் வெற்றியாளரைத் தோற்கடித்திருப்பது தமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக ஜோனதன் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள காமென்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கவனம் செலுத்துவதே தமது அடுத்த இலக்கு என்று அவர் தெரிவித்தார்.