பினாங்கு நவ. 4-

பினாங்கு மாநகராண்மைக் கழகத்தில் ஓர் அங்கமாக செயல்படும் பொதுப் பணித் துறை பிரிவின் கீழ் தனியாருக்கு ஒப்படைக்கப்படும் குத்தகை திட்டப் பணிகளில், உள்ளூர்வாசிகளுக்கு வாய்ப்பு வழங்கப் பட வேண்டுமென்று, அக்கழகத்தின் ஓர் உறுப்பினராக செயல்பட்டு வரும் ஆர்.காளியப்பன் கோரிக்கை எழுப்பியிருக்கிறார்.

செலவீனத்தை குறைக்கும் நோக்கத்தில் மாநகராண்மைக் கழகம் தனியார் துறையினருக்கு வழங்குகின்ற குத்தகை பணிகளுக்கு அந்நியத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவது வாடிக்கையாகி வரும் நிலைமை, உள்ளூர்வாசிகள் பலருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

வேலையில்லாமல் உள்ளூர் இளைஞர்கள் பலர் பரிதவித்து வரும் அவல நிலை தற்போது தொடர்கதையாகி வருகின்ற பட்சத்தில், இத்தகைய குத்தகைப் பணிகள் பலவற்றை அந்நியத் தொழிலாளர்களின் ஆக்கிரமிப்பு மேலோங்கி வருவதை இனியும் சகிக்க இயலாது என்று காளியப்பன் முறையிட்டுள்ளார்.

பெரும்பாலும் தூய்மைப் பணிகளைச் சார்ந்த குத்தகைத் திட்டங்களை செயல்படுத்தும் தனியார் குத்தகையாளர்கள், தங்கள் செலவீனங்களை மிச்சப்படுத்தும் நோக்கத்தில், அந்நியர்களை பணியமர்த்திக் கொண்டு உள்ளூர்வாசிகளுக்கு அத்தகைய வாய்ப்புகளை வழங்க மறுக்கும் வழக்கமான நிலையில் மாற்றம் நிகழ வேண்டுமென்று காளியப்பன் ஆவல் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் பல்வேறு துறைகளில் ஏறத்தாழ 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரையிலான இளைஞர்கள் இவ்வாண்டு ஜனவரித் திங்களில் வேலையிழந்திருப்பதாகவும், ஏற்கனவே இந்நிலையில் மேலும் பலர் பரிதவித்து நிற்கின்ற பட்சத்தில், இந்த அவல நிலையிலான எண்ணிக்கை அதிகரித்திருப்பது வேதனைக்குரியது எனவும் காளியப்பன் புலப்படுத்தியுள்ளார்.

இதனை கருத்திற் கொண்டு மாநகராண்மைக் கழக குத்தகைக் பணிகளை மேற்கொள்ளும் தனியார் துறை குத்தகையாளர்கள் தங்களின் தொழிலுக்கு உள்ளூர்வாசிகளுக்கு வாய்ப்பு வழங்குவதை மாநகராண்மைக் கழகமே உக்குவிக்கும் விதமாக செயல்பட வேண்டுமென்று அண்மையில் இங்கு நடைபெற்ற மாநராண்மைக் கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் அவர் பரிந்துரை விடுத்துள்ளார்.

மாநகராண்மைக் கழகப் பணிகளுக்கு உயர் கல்வித் தரம் வாய்ந்த ஊழியர்கள் நியமனம் செய்யப்படுவது ஒரு வழக்கமாக இருந்து வரும் நிலைமைக்கு நேர்மாறாக, தனியார் குத்தகையாளர்களால் வழி நடத்தப்படும் பல்வேறான குத்தகைப் பணிகளுக்கான தொழிலாளர்களுக்கு இத்தகைய ரீதியில் தரம் பார்க்கப்படுவதில்லை எனவும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

ஆதலால் இதனை உணர்ந்து வேலையில்லா திண்டாட்டத்தால் பரிதவித்து நிற்கும் உள்ளூர்வாசிகளின் நிலைமையை சீர்தூக்கிப் பார்த்து. மாநகராண்மைக் கழக நிர்வாகத்தினர், தனியார் குத்தகையாளர்களிடம் உள்ளூர்வாசிகளுக்கு பணிச் சலுகை வழங்குவதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டுமென்று காளியப்பன் வலியுறுத்தியுள்ளார்.