பழமை பேசி சிவநேசன் அரசியல் நடத்தக்கூடாது! ஸ்ரீ முருகன்

கோலாலம்பூர் நவ. 5-

மலேசிய இந்திய காங்கிரஸை குறை கூறி அரசியல் நடத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின்னரும், மக்களுக்கு சேவை செய்யாமல் இன்னமும் மஇகாவை விமர்சிப்பவர்களை மக்கள் எப்போதோ ஒதுக்கி விட்டனர் என மலேசிய இந்திய காங்கிரசின் இளைஞர் பிரிவின் மத்திய செயலவை உறுப்பினர் ஸ்ரீமுருகன் தெரிவித்தார்.

மலேசிய இந்திய காங்கிரசின் தேசிய தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் நடப்பு அரசியல் குறித்து வெளிப்படையாக பேசினார். அதனை ஏற்றுக்கொள்ள முடியாத பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் வெளியிட்டிருக்கும் அறிக்கை வேடிக்கையாக உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் ஆட்சி மாற்றத்திற்கு முன்பு மலேசிய இந்திய காங்கிரஸ் மீது என்னென்ன குற்றச்சாட்டுகளை கூறினாரோ அதேயே இன்றளவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த தவறின் காரணமாகத்தான் மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். அதே மக்கள் இப்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கவனித்து வருகிறார்கள். குறிப்பாக இந்தியர்கள் நம்பிக்கைக் கூட்டணி மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்பதை முதலில் அறிந்துக் கொள்ளுங்கள்.

மாற்றத்தை கொண்டு வருவோம். புதிய மலேசியாவை உருவாக்குவோம். இந்தியர்களின் நலனுக்கு முக்கியத்துவம் வழங்குவோம். 100 நாட்களில் அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்போம் என தேர்தலுக்கு முன்பு நீங்கள் வழங்கிய வாக்குறுதிகள் என்னவானது என்பது நினைவிருக்கிறதா?

மஇகா என்ன செய்தது என்று தொடர்ந்து கேள்வி கேட்பதை நினைத்தால் எங்களுக்கு வேடிக்கையாக இருக்கின்றது. இந்திய சமுதாயத்தின் ஏற்றமிகு எதிர்காலத்திற்காக கல்வி கடன் உதவி வழங்கியது ம இ கா தான் என்பதை அனைவரும் உணர்ந்து விட்டார்கள்.

ஆனால் நீங்கள் அதை உணராமல் பழைய கதையை பேசிக்கொண்டிருப்பது எந்த வகையிலும் உங்களுக்கு நன்மையை கொண்டு வராது. அண்மையில் கூட ஏய்ம்ஸ்ட் உட்பட பல பல்கலைக்கழகங்களில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு எம்ஐஇடி கல்விக் கடனுதவி வழங்கியது உங்களுக்கு நினைவிருக்கின்றதா? என்ற கேள்வியை ஶ்ரீ முருகன் முன்வைத்தார்.

டான்ஸ்ரீ எஸ் விக்னேஸ்வரன் ம இ கா தலைவராக பொறுப்பேற்றது முதல் அனைத்து நிலைகளிலும் நாம் உருமாற்றம் கண்டு வருகிறோம். இந்தியர்களின் மகத்தான ஆதரவும் நமது கட்சி பக்கம் திரும்பியுள்ளது. முன்னதாக கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளும் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சீராக நடந்து வருவதன் வெளிப்பாடுதான் ம இ கா வின் தேசிய திறந்த இல்ல உபசரிப்பில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டது.

இனியும் பழைய கதையை பேசி அரசியல் நடத்தாமல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முக்கியத்துவம் வழங்குங்கள். நடப்பு அரசியலில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று கைது செய்யப்பட்டவர்களுக்கு எம்மாதிரியான நடவடிக்கைகளை முன்னெடுக்க போகிறீர்கள் என்பதை முதலில் தெரியப்படுத்துங்கள்.

மக்கள் நடப்பு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்பதை உணர்ந்துகொண்டு செயலாற்றுவதற்கு சிவனேசன் தயாராக வேண்டுமென ஸ்ரீமுருகன் கேட்டுக்கொண்டார்.