கோலாலம்பூர், நவம்பர் 5-

விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐவர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கான ஜாமின் மனுவை  உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

தங்களை விடுவிக்க கோரி மனுதாரர்கள் செய்த விண்ணப்பம் தற்போது காலவதியாகிவிட்டது. ஏனெனில் அவர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று நீதித்துறை ஆணையர் முகமட் ஷாரில் முகமட் சாலே கூறினார்.

முகமட் ஷாரில் சமர்பித்த ஆட்சேபத்தில் விண்ணப்பம் காலாவதியாகிவிட்டதாகவும், இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் தடுப்புக் காவல் சட்டவிரோதமானது என்பதால் விண்ணப்பங்கள் பொருத்தமானதாகதான் உள்ளது என்று வழக்கறிஞர் ராம்கர்பால் சிங் கூறியிருக்கிறார்.

காடிக் சட்டமன்ற உறுப்பினரும் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினருமான ஜி சாமிநாதன், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி குணசேகரன், வி.சுரேஸ் குமார், மற்றும் எஸ்.அறிவைனாதன் ஆகியோர் விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்பிருப்பதாக கூறி சொஸ்மா சட்டத்தின் கீழ் கடந்த அக்டோபர் 10 மற்றும் 12ஆம் தேதிகளில் கைது செய்யப்பட்டனர்.