பிளஸ் நெடுஞ்சாலை நிறுவனத்தை எதிர்த்து மறியல்! – கேசவன் கந்தசாமி

கோலாலம்பூர், நவ. 5-

டோல் சாவடிகளில் இனி டச் அண்ட் கோ அட்டையில் பணத்தை சேர்க்க முடியாது என பிளஸ் நெடுஞ்சாலை நிறுவனம் அறிவித்திருப்பது மிகப்பெரிய ஏமாற்றத்தை தருவதாக மலேசிய இந்திய காங்கிரசின் இளைஞர் பிரிவு பொருளாளர் கேசவன் கந்தசாமி சாடினார்.

டோல் சாவடிகளில் டச் அண்ட் கோ அட்டையில் பணத்தை சேர்க்கும் பகுதிகள் இனி செயல்படாது என அறிவித்திருப்பது ஆக்ககரமான செயல்திட்டம் அல்ல என்று அவர் தெரிவித்தார். ஆபத்து அவசர நேரங்களில் டோல் சாவடியை பயன்படுத்தும் மக்கள் டச் அண்ட் கோவில் பணம் இருக்கிறதா என்பதை சரி பார்த்த பிறகே பயணம் செய்யவேண்டும் என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும் என அவர் சாடினார்.

பிளாஸ் நெடுஞ்சாலையில் பல்வேறான பிரச்சினைகள் உள்ளன என்பது குறித்து வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் நடவடிக்கை எடுக்காத பிளஸ் நெடுஞ்சாலை டச் அண்ட் கோ விற்கு முக்கியத்துவம் வழங்குகிறது என கேசவன் குறிப்பிட்டார்.

பிளஸ்இன் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதை அவர்களுக்கு நாம் உணர்த்த வேண்டும் .அதனால் அனைவரும் எங்களுடன் இணைந்து பிளாஸ் நிறுவனத்தை எதிர்க்க வேண்டும் என கேசவன் கேட்டுக்கொண்டார்.
பிளாஸ் நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் என்ற வகையில் பிளஸ் வழங்கும் சேவைகள் தரம் குறித்து கேள்வி எழுப்புவதற்கு எங்களுக்கு உரிமை உண்டு.

கடந்த காலங்களில் பிளஸ்சில் அதிகமான பேர் வேலை செய்தார்கள். இன்று டச் அண்ட் கோ பண சேர்ப்பு பகுதியில் மட்டுமே பணியாளர்களை பார்க்க முடிந்தது தற்போது அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது என கேசவன் குறிப்பிட்டார்.

டோல் விலையை குறைக்கும் நடவடிக்கைகள் இங்கு முன்னெடுக்கப்படவில்லை ஆனால் ஆட்கள் குறைப்பு, தரமான சேவையை வழங்குவதில் பின்னடைவு என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். இதன் தொடர்பில் மஇகா இளைஞர் பகுதி நவம்பர் 7ஆம் தேதி சிரம்பான் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபடும் என்றும் அவர் கூறினார்.