புத்ராஜெயா, நவ.6-

 கொடுங்கோல் சட்டமாக கருதப்படும் 2012ஆம் ஆண்டு சொஸ்மா சட்டத்தில், அரசாங்கம் முடிந்த வரையில் விரைவில், திருத்தங்களை மேற்கொள்ளவிருப்பதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை புத்ராஜெயாவில் நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் மன்றத்தின் கூட்டத்தில், அது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அவ்விவகாரம் தொடர்பில், இரண்டு முறை சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கூட்டங்கள் நடத்தப்பட்டதாக குறிப்பிட்ட பிரதமர், கைது செய்யப்படுபவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தாமல் தடுத்து வைப்பது கொடுங்கோல் நிறைந்ததாக பார்க்கப்படுவதால், சொஸ்மா போன்ற அத்தகைய சட்டங்களில் சில திருத்தங்களை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.

அந்த சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டால், அதனை தவறாக பயன்படுத்துவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, தற்போது, அல்லது அடுத்து நடைபெறவிருக்கும்  நாடாளுமன்ற கூட்டத் தொடரில், அது தொடர்பான சட்ட மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்றாரவர்.

தற்போதைய, நாடாளுமன்றக் கூட்டத் தொடர் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.

இதனிடையே, சம்பந்தப்பட்ட சட்டத்திருத்தங்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பைக் கொண்டிருந்ததாக, சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 பேரின் காரணமாக மேற்கொள்ளப்படுகின்றதா? என்ற கேள்வியை நிருபர்கள் முன்வைத்தனர்.

அது குறித்து பதிலளித்த பிரதமர் துன் டாக்டர் மகாதீர், சம்பந்தப்பட்ட சட்டங்களை அகற்றுவது குறித்து, பக்காத்தான் ஹராப்பான் கடந்த பொதுத்தேர்தலில் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், சில விவகாரங்கள் காரணமாக அம்முயற்சிகள் தள்ளி வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அந்த சட்டங்கள் இனிமேலும், தவறாக பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய தற்போது, உடனடியாக நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தாங்கள் கருதுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.