பிரதமர் பதவி விவகாரம் : துன் மகாதீருக்கு நன்றி!- அன்வார்

கோலாலம்பூர், நவ. 6-

பிரதமர் பதவியை தம்மிடம் ஒப்படைப்பதாக கூறிய பிரதமர் துன் டாக்டர் மகாதீருக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

”மலேசிய மக்களுக்கு நன்றி”. ”துன் மகாதீருக்கு நன்றி”. என அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பில் நான் பலமுறை விளக்கம் அளித்து விட்டேன் தொடர்ந்து இது குறித்து பேச நான் விரும்பவில்லை. கடந்த 14ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டது. தேர்தல் முடிவுக்குப் பின்னர் இதுவரையில் நம்பிக்கை கூட்டணித் தலைவர்களும் வேறு பெயரை பிரதமர் பதவிக்கு முன்மொழிய வில்லை என அன்வார் கூறினார்.

பிரதமர் பதவியை ஒப்படைக்கவிருப்பதாக துன் டாக்டர் மகாதீர் கூறிய கருத்து குறித்து பதிலளித்த டத்தோ ஶ்ரீ அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.

ஆஸ்திரேலியா ஊடகத்திற்கு கடந்த திங்கள்கிழமை பிரத்தியேக பேட்டி அளித்த துன் டாக்டர் மகாதீரிடம் பிரதமர் பதவியை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஒப்படைப்பீர்களா? அல்லது டத்தோஸ்ரீ அஸ்மின் அலி உட்பட வேறு யாருக்காவது வழங்குவீர்களா? என்ற கேள்வியை முன்வைத்தனர்.

அந்த கேள்விக்கு பதிலளித்த மகாதீர் ”ஆம் நான் பதவியை ஒப்படைப்பேன்” என தெரிவித்தார்.

டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக வருவதை தடுக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக வெளிவந்த செய்தி குறித்து கருத்துரைத்த அன்வார், இதுவரையில் எந்த நம்பிக்கை கூட்டணி தலைவரும் வேறு பெயரை முன்மொழிய வில்லை என கூறினார்.

இது தேர்தலுக்கு முன்பு எடுக்கப்பட்ட முடிவு அதனை அனைவரும் பின்பற்றுகிறார்கள். ஆனால் அரசியலில் சில சூழ்ச்சிகள் எழுவதாக கூறப்படுவதை நம்மால் தடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். ”இந்த விவகாரத்தில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை”. ”நாங்கள் வேலையில் கவனம் செலுத்துகிறோம்” என அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக ஜனநாயக செயல் கட்சியை ஒதுக்கிவிட்டு புதிய அரசாங்கத்தை கொண்டுவரும் முயற்சி முன்னெடுக்கப்படுவதாகவும் அன்வார் பிரதமராவதை முடக்கும் நடவடிக்கை தொடர்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.