எல்டிடிஇ விவகாரம்: போலீஸ் மீது பரிதாபப்படும் நஜீப்!

0
2

கோலாலம்பூர், நவ.7-

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் தொடர்பான நடவடிக்கையில், நாட்டின் இறையாண்மையைக் காப்பதற்காக போலீஸ் அதிகாரிகள் கடுமையாக உழைத்த நிலையில், பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான சட்டத்துறை அலுவலகம், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் மீதான இரு குற்றச்சாட்டுகளை இரத்து செய்துள்ளது.

அதன் காரணமாக, போலீசின் மீது தாம் பரிதாபம் கொள்வதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

புதிய மலேசியாவின் கீழ் டிஏபி தொடர்பான வழக்குகள் இரத்து செய்யப்படுவது ஒன்றும் அதிர்ச்சியளிக்கக்கூடியது அல்ல. 14ஆவது பொதுத்தேர்தல் முடிந்த பிறகு, லிம் குவான் எங் மீதான ஊழல் வழக்கு விசாரணையில் இருக்கும் போது, இரத்து செய்யப்பட்டது. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும் அதற்கு அதிர்ச்சி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தது.

தற்போது, நீதிமன்றத்தில் வழக்குகள் இரத்து செய்யப்படுவது, இனிமேலும், அதிர்ச்சியைத் தராத வழக்கமான நடைமுறையாகவே ஆகிவிட்டது எனவும் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கூறியுள்ளார்.