ஷாஆலம் நவ. 8-

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தி கொண்டு உள்ளார்கள் என்பதை நாம் உணர வேண்டும். மீண்டும் அவர்களின் நம்பிக்கையை பெறுவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க தவறினால் அடுத்த தேர்தலில் மக்களால் நாம் ஒதுக்கப்படுவோம் என சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவ் நிறுத்தினார்.

சொஸ்மா சட்டத்தில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என கைது செய்யப்பட்டவர்கள் உட்பட பல்வேறு பிரச்சனைகளை இந்திய சமுதாயம் எதிர்நோக்கி வருகிறது. மக்கள் நம் மீது எம்மாதிரியான எண்ணத்தை கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம்தான் ஆய்வு செய்ய வேண்டும்.

குறிப்பாக மீண்டும் நம்பிக்கையை பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென 2020 சிலாங்கூர் மாநில பட்ஜெட்டில் இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு நிதி குறித்து விளக்கமளித்த பின் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சொஸ்மாவில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்து பிரதமர் துன் டாக்டர் மகாதீரிடம் தாம் உட்பட மனிதவள அமைச்சர் குலசேகரன், அமைச்சர் கோபிந்த் சிங், துணை அமைச்சர் சிவராசா, பினாங்கு மாநில இரண்டாம் முதல்வர் ராமசாமி பேச்சு நடத்தியதாக கணபதிராவ் கூறினார். பின்னர் அந்த சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் கூறியதையும் கணபதிராவ் சுட்டிக்காட்டினார்.

நடப்பு அரசாங்கத்தின் மீது இந்தியர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளார்கள் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எவ்வாறு வெற்றி பெற்றோம்! எதனை மூலதனமாகக் கொண்டு அரசாங்கத்தை அமைத்தோம் என்பதை உணர்ந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி மக்களின் நம்பிக்கையை பெற வேண்டுமென கணபதி ராவ் கேட்டுக்கொண்டார்.