புத்ராஜெயா, நவ.12-

எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் நிதியை தவறாக பயன்படுத்தியதாக 7 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், தற்காப்பு வாதம் புரிய வேண்டுமென கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றத்தின் அந்த உத்தரவைக் கேட்டு நஜீப் அதிர்ச்சியடைந்ததாக அவரது வழக்கறிஞர் கூறியிருந்த நிலையில், தாமும் அவரைப் போல் அதிர்ச்சியடைந்ததாக துன் மகாதீர் கிண்டலாக கூறியுள்ளார்.

திங்கள்கிழமை புத்ராஜெயாவில் நடைபெற்ற பெர்சாத்து கட்சியின் உச்சமன்ற கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்கள், நஜீப் அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுவது குறித்து வினவிய போது, பிரதமர் அவ்வாறு பதிலளித்துள்ளார்.

நஜீப் குற்றம் செய்திருப்பது ஒட்டுமொத்த உலகிற்கே தெரியும். ஆயினும், தாங்கள் நாட்டின் சட்டத்தை பின்பற்ற வேண்டியுள்ளது. அவர் தவர் செய்திருக்கிறாரா என்பதை அறிய நீதிமன்றத்திற்கு அனுப்பியுள்ளோம். இனி, அக்குற்றச்சாட்டுகள் குறித்து நஜீப் பதிலளிக்க வேண்டும் என துன் மகாதீர் கூறியுள்ளார்.

1எம்.டி.பி விவகாரத்தை அம்பலப்படுத்தியதற்காக இதற்கு முன்பு கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் மத்தியாஸ் சாங், அரசியல்வாதியான கைருடின் அபு ஹாசான் ஆகியோருக்கு ஜாமின் கிடைக்காத நிலையில், நஜீப்பிற்கு ஜாமின் கிடைத்துள்ளது.

கண் வலியைக் கொண்டிருக்கும் நஜீப், பிரச்சாரங்களில் ஈடுபட முடிகின்றது. ஆனால், நீதிமன்றத்திற்கு வர முடியவில்லை. இது போன்ற அறிவுக்கு பொருந்தாதவற்றை அவரிடமிருந்துதான் காண முடிகின்றது. நாங்கள் நாட்டின் சட்டத்தை மதிப்பதால் மென்மையான போக்கைக் கொண்டிருப்பதாகவும் துன் மகாதீர் முகமட் குறிப்பிட்டுள்ளார்.