அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > 21-ஆம் நூற்றாண்டின் வகுப்பறை, கற்றல் கற்பித்தல் திறன்கள்!
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

21-ஆம் நூற்றாண்டின் வகுப்பறை, கற்றல் கற்பித்தல் திறன்கள்!

தஞ்ஜோங் மாலிம், ஆக. 26-

உலக தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் உலகத் தமிழ் 2017-ஆம் ஆண்டு இணைய மாநாடு நேற்று சுல்தான் இட்ரிஸ் கல்வியல் பல்கலைக்கழகத்தில் துவக்கம் கண்டது.  இம்மாநாட்டிற்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் நேற்று பேராக் சுற்று வட்டார ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களுக்கு இலவசப் பயிலரங்கு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது.

21-ஆம் நூற்றாண்டுத் தமிழ் வகுப்பறை: கற்பித்தலில் எண்ணிம பயன்பாடும் செல்நெறியும் ( 21-st Century Tamil Classroom: Teaching and Engaging Digital Trends), ஆசிரியர்களுக்கான 21-ஆம் நூற்றாண்டு வாழ்நாள் கற்றல் திறன்கள் ( 21st Century Life Long Learning Skills for Teachers) எனும் இவ்விரு தலைப்புகளிலான இப்பயிலரங்கை, தமிழ் மொழி கற்றல் கற்பித்தலில் நன்கு அனுபவமும் மற்றும் 21-ஆம் நூற்றாண்டு கற்றல் கற்பித்தலில் சிறந்த ஆளுமையைப் பெற்ற நாடறிந்த ஆசிரியர் திரு வாசுதேவன் இலட்சுமணன் அவர்கள் நடத்தினார்.

தனது தனித்துவம் வாய்ந்த தமிழ் மொழி கற்பித்தல் திறன்களில் ஆற்றல் பெற்றவரும், வலைப்பூ வடிவமைப்பதில் நன்கு ஆற்றல் பெற்று மலேசியாவிலுள்ள தமிழாசிரியர்களில் முதல் வலைப்பூ பதிவாளர் மற்றும் அனைத்துலக ரீதியில் சிறந்த வலைப்பூ பதிவாளர் என்ற அங்கிகாரமும் பெற்ற இவர், பங்கேற்பாளர்களுக்கு அது குறித்த தனது அனுபவங்களையும் அதன் செய்முறையையும் திறம்பட எடுத்துரைத்து பயிலரங்கிற்கு சிறப்பு சேர்த்தார்.

தொழில்நுட்ப பரிமாண வளர்ச்சியில் பள்ளியிலும் கற்றல் சூழலிலும் மாணவர்கள் கருவிகளின் பயன்பாட்டை எதிர்பார்க்கின்றனர். மாணவர்களின் அன்றாட வாழ்வும் பள்ளியில் கற்றல் சூழலும் தொடர்பற்று வெவ்வேறு உலகங்களாய்க் காட்சி தருகிறது. இந்த வெவ்வேறு உலகத்து நிதர்சனம் மாணவர்களை வெகுவாகப் பாதிப்புக்குள்ளாக்குகிறது. இன்றைய கல்வி அமைப்பின் தலையாயப் பிரச்னை. இலத்திரனியல் கற்றல் கருவிகள் இனி நாம் புலங்கும் சூழல் வந்து விட்டது.

21-ஆம் நூற்றாண்டு என்று வலிந்து சொல்வது கூட அவசியமற்றது. இந்த மாற்றத்திற்கு ஆசிரியர்களும் மாணவர்களும் பக்குவப்பட வேண்டும் என வாசுதேவன் குறிப்பிட்டார். 21-ஆம் நூற்றாண்டின் செல்நெறிகளுக்குப் பயன்தரும் நான்கு பிரிவுகளான, அதாவது சிந்தனை முறைகள் (புத்தாக்க சிந்தனை, விமர்சனச் சிந்தனை, சிக்கல் கலையும் சிந்தனை), பயன்பாட்டுக் கருவிகள் (தகவல் தொடர்பு தொழில்நுட்பம், கையடக்கக் கருவிகள்), செயல் முறைகள் (பேசும் கலை, ஒத்துழைப்பு) மற்றும் வாழ்வியல் திறன்கள் (குடியுரிமை, வாழ்க்கை & தொழில், சமூகப் பொறுப்பு) குறித்து பேசிய அவர், ஆசிரியர்கள் அதற்கு எவ்வாறு தயார் நிலையில் தங்களை பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் எடுத்துரைத்தார்.

இதுகுறித்து, பயிலரங்கில் பங்குபெற்ற பயிற்சி ஆசிரியர்கள் சிலர் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். 21-ஆம் நூற்றாண்டுத் தமிழ் வகுப்பறை மற்றும் ஆசிரியர்களுக்கான 21-ஆம் நூற்றாண்டு வாழ்நாள் கற்றல் திறன்கள் குறித்த இத்திட்டம் மாணவர்களை உயர் சிந்தனைக்கு இட்டுச்செல்லும் என அ. ஹனிஸ் குமார் தெரிவித்தார். வகுப்பறைக்கு அப்பால் வெளியேயும் இது அவர்களுக்கு பெரிதும் துணை புரியும் என குறிப்பிட்ட அவர், கற்றல் கற்பித்தலுக்கு இத்திட்டம் சிறந்த திட்டமாகத் திகழும் என கருத்துரைத்தார். 21-ஆம் நூற்றாண்டில் பாடங்களை எளிதில் புரிந்துகொள்ள மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என மு. சாரதி, பே. சுமித்ரா ஆகியோர் கருத்துரைத்தனர்.

புதிய தொழில்நுட்பங்களை ஆசிரியர்கள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். 21-ஆம் நூற்றாண்டு கல்வி திட்டத்திற்கு அக்கால கட்ட மாணவர்களை எவ்வாறு சுலபமாக புரிந்துகொள்ள வைக்க ஆசிரியர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் எனும் நுணுக்கங்கள் குறித்தும் இப்பயிலரங்கின் வழி தெரிந்து கொண்டேன் என வே. இந்துமதி, மு. நிவாசினி ஆகியோர் குறிப்பிட்டனர்.

ஆங்கில வார்த்தைகள் தமிழ் ஆக்கத்தில் இருப்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. மேலும், புதுப்புது செயலிகள் குறித்தும் அதனை பதிவிறக்கம் செய்யும் முறைகள் குறித்தும் அறிந்து கொண்டதாக டே. ஜவீணா, மா. ஹரிஹரன், அ. ஜெரி ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.

2 thoughts on “21-ஆம் நூற்றாண்டின் வகுப்பறை, கற்றல் கற்பித்தல் திறன்கள்!

  1. பவானி.சா

    பயனுள்ளது!
    சான்றுகளும் தந்திருக்கலாம்

  2. துருவன் த/பெ பெரியசாமி

    வாழ்த்துகளும் பாராட்டுகளும்….!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன