பெக்கான் நானாஸ், நவ.14-

தேசிய முன்னணி இனவெறியைத் தூண்டுவதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் குற்றம் சாட்டியுள்ளார்.

ஒரு மக்கள் பிரதிநிதி அனைத்து இனங்களையும் பிரதிநிதிக்கக்கூடியவர். ஆகையால், நான் மலாய்க்காரர்களுக்கு மட்டுமே பிரதமர் அல்ல. மாறாக, இந்நாட்டிலுள்ள அனைத்து இனங்களுக்குமான பிரதமராக தாம் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

தற்போது, தேசிய முன்னணி என்பதே கிடையாது. ஆனாலும், தராசு சின்னத்தை பயன்படுத்தி அக்கூட்டணி மக்களை ஏமாற்றுகின்றது. ம.சீ.ச ஏற்கனவே இறந்துவிட்டது. ம.இ.கா-வும் அதில் இடம்பெறவில்லை. அம்னோவில் கால் பகுதியினர்தான் நிலைத்திருப்பதாக துன் டாக்டர் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தாம் இன்னமும் அம்னோ மற்றும் தேசிய முன்னணியின் தலைவராக இருப்பதாக அத்தரப்பினர் கூறி வருகின்றனர். நான் அம்னோ, தேசிய முன்னணியின் தலைவர் அல்ல. நான் பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான அரசாங்கத்தின் பிரதமர். அதனால், யாரும் குழம்ப வேண்டாமென தஞ்சோங் பியாய் நாடாளுமன்றத்திலுள்ள அரசு சார்பற்ற இயக்கங்களுடனான செய்தியாளர்கள் சந்திப்பில் துன் மகாதீர் நினைவுறுத்தியுள்ளார்.