ஈப்போ, நவ.14-

நாளை தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட் சீரான மற்றும் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கும் என்று பேராக் மாநிலம்  நம்பிக்கை தெரிவித்தது.

இந்த பட்ஜெட் மாநில வளங்களைப் பல்வகைப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அகமது பைசால் அசுமு கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவரும் ஒரு மாநிலமாக பேராவைத் தயார்படுத்துவதிலும் மாநில அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று  மந்திரி பெசார் குறிப்பிட்டார்.

 “முதலீட்டு துறைக்குக் கிடைத்த வரவேற்பின் அடிப்படையில் அதிகமான முதலீட்டு தலங்களைத் தயார் செய்ய வேண்டிய நிலையில் நாங்கள் இருக்கிறோம்” என்று நியூ ஸ்ரெயிட்ஸ் டாய்ம்ஸ் நாளேட்டிடம் அவர் விவரித்தார்.

கடந்த ஜனவரிக்கும் மார்ச் மாதத்திற்குமிடையே பேராக் 1.43 பில்லியன் வெள்ளி முதலீட்டைப் பதிவு செய்தது.இதே கால கட்டத்தில் கடந்தாண்டு 249.8 மில்லியன்  வெள்ளி முதலீடு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

திறன்மிக்க தொழிலாளர்களைத் தயார்படுத்துவது இதைவிட முக்கியம்.இதன் பொருட்டு இந்த பட்ஜெட் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி  பயிற்சி திட்டங்கள் மீது அதிக கவனம் செலுத்தும்.

அதே வேளையில், குறைந்த வருமானம் பெறும் தரப்பினர்,மாநில அரசு ஊழியர்களுக்கான அலவன்ஸ், வெள்ளப் பேரிடர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் மீதும் இந்த பட்ஜெட்டில்  கவனம் செலுத்தப்படும் என்றார்.