மக்கள் நல்லிணக்க ஆலோசனை மன்றம் உதயம்!

0
2

புத்ரா ஜெயா, நவ.15-

தேசிய ஒருமைப்பாட்டு ஆலோசனை மன்றத்திற்குப் (எம்கேபிஎன்) பதிலாக மக்கள் நல்லிணக்க ஆலோசனை மன்றம்(எம்பிகேஆர்) தோற்றுவிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் துறை அமைச்சர் பி.வேதமூர்த்தி தெரிவித்தார்.

தேசிய ஒருமைப்பாட்டை மேலோங்கச் செய்யும் முயற்சியாக ஒருமைப்பாடு மற்றும் சமூக வளம் தொடர்பான விவகாரங்களில் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் நம்பிக்கைக்குரிய அமைப்பாக எம்பிகேஆர்  செயல்படும் என்று  வேதமூர்த்தி கூறினார்.

“உண்மையாகவே ஒன்றுபட்ட மலேசிய இனத்தை உருவாக்குவதற்கு எந்தவொரு பயமும் வரையரையும் இல்லாத ஓர் அமைப்பாக எம்பிகேஆர் இயங்கும் என்று இங்கு எம்பிகேஆர் தொடக்கம் மற்றும் 2019-2022 எம்பிகேஆர் உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் அவர் குறிப்பிட்டார்.

அரசியல்வாதிகள்,கல்வியாளர்கள், பொதுச் சேவைத் துறை ஊழியர்கள், அரசு சார்பற்ற அமைப்புகள், ஊடகவியலாளர்கள், சிறுபான்மை சமூக பிரதிநிதிகள் மற்றும் இளைஞர் பிரதிநிதிகள் என பல்வேறு பின்னணியைக் கொண்ட 14 எம்பிகேஆர் பிரதிநிதிகள்  நியமிக்கப்பட்டனர்.

 “அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்கு அப்பால் நமது சவால்களை எதிர்நோக்குவதற்குச் சிறந்த அணுகுமுறை குறித்தும் அவர்கள் சிந்திக்க வேண்டும்.தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கத்தில் இன பதற்றத்தைத் தணிப்பதிலும் இவர்கள் பங்காற்ற வேண்டும்” என்றார்.

அமைச்சரின் உரையை தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் ஒருமைப்பாட்டு துறை தலைமை இயக்குநர் டத்தோ பஹாரின் இட்ரிஸ் வாசித்தார்.

நாட்டில் இன விவகாரம் வருத்தமளிக்கும் வகையில் இருப்பதால் தேசிய ஒற்றுமையை மேலோங்கச் செய்வதே அரசாங்கத்தின் தலையாய கடப்பாடாக  தொடர்ந்து இருந்து வரும் என்றார்.

தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதில் மலேசியா தற்போது பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருவதாக அமைச்சர் மேலும் சொன்னார்.