இப்போதைக்கு எனக்கு அரசியலில் ஈடுபாடு கிடையாது! -ரபிஸி ரம்லி

0
5

ஷா ஆலாம், நவ.15-

அரசியலில் முழு ஆர்வத்துடன் ஈடுபட இப்போதைக்கு தனக்கு விருப்பம் இல்லை என்று கூறுகிறார் நேஷனல் ஃபீட்லோட் கார்பரேஷன் (என்ஃஎப்சி) நிறுவன வங்கி விவரங்களை வெளியிட்ட குற்றத்திற்காக விதிக்கப்பட்ட 30 மாத சிறை தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிகேஆர் உதவித் தலைவரான ரபிஸி ரம்லி.

தான் இப்போது சாதாரண நபராக இருக்க விரும்புவதோடு அதிகமான நேரத்தை குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் செலவழிக்க விரும்புவதாகவும் இன்று காலையில் ஷா ஆலாம் உயர்நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளிகளித்தில் ரபிஸி கூறினார்.

“அரசியலில் தீவிரமாக ஈடுபடும்போது அதிக நேரமும் சக்தியும் தேவைப்படுகிறது.இதனால் குடும்பத்திற்காக போதிய நேரத்தைச் செலவிட முடியவில்லை.இது பலருக்குப் புரிவதில்லை” என்றார்.

“இப்போதைக்கு  எனக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை என்பதை நான் முன்கூட்டியே சொல்லியிருக்கிறேன். அதோடு, அரசாங்கத்திலோ அல்லது பொதுவிலோ எந்த பதவி வகிக்கவும் எனக்கு ஆர்வம் இல்லை.இன்னும் மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு நான் சாதாரண நபராகவே இருந்துவிடுகிறேன்” என்று ரபிஸி மேலும் கூறினார்.

தேசிய முன்னணியாக இருந்தாலும் சரி ஆளும் பக்காத்தான் கூட்டணியாக இருந்தாலும் சரி ஆட்சிக்கு வந்ததும் உண்மை நிலையை மறந்துவிடுவார்கள்.

“இதன் பொருட்டு, பக்காத்தான் கூட்டணி ஆட்சி காலத்திலேயே நான் சாதாரண நபராகவே இருந்துவிடுகிறேன்” என்றார் முன்னாள் பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான ரபிஸி.

என்ஃஎப்சி தொடர்பில் நான்கு கணக்குகளை வெளியிட்ட குற்றத்திற்காக ஷா ஆலாம் செஷ்ன்ஸ் நீதிமன்றம் ரபிஸிக்கு எதிராக கடந்த 2012 ஆம் ஆண்டு 30 மாத சிறை தண்டனை விதித்தது.இதன் காரணமாக இவர் கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடத் தகுதி பெறவில்லை.