தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல்: சீனர்களின் ஆதரவால் தே.முன்னணியின் வெற்றி நிச்சயம்?

0
4

பெட்டாலிங் ஜெயா, நவ.15-

தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற தொகுதியில் நாளை நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்கு முன்னரே சீன வாக்காளர்கள் தேசிய முன்னணிக்கு தங்களின் ஆதரவைத் தெரிவிக்கத் தொடங்கிவிட்டது இல்ஹாம் மையம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பல்வேறு பிரிவுகள் மற்றும் இடங்களைச் சேர்ந்த 394 வாக்காளர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் தேசிய முன்னணி வேட்பாளர் வீ ஜெக் செங் எளிதாக வெற்றி பெறுவார் என்றும்  இது ஜோகூரில் அம்னோவின் செல்வாக்கை பிரதிபலிப்பதாக உள்ளது என்றும் அம்மையம் கூறியது.

கடந்த பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி இத்தொகுதியில் வெற்றி பெற்றதற்கு  இங்கு பாஸ் கட்சி போட்டியிட்டதால் மூன்று முக்கிய அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் ஏற்பட்ட முக்கோண போட்டியே முக்கிய காரணம்.

இத்தொகுதி வாக்காளர்களில் 42 விழுக்காட்டினர் சீன வாக்காளர்களாக இருக்கின்ற வேளையில் 74 விழுக்காட்டினர் கடந்தாண்டு தேர்தலில் நம்பிக்கை கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஆனால், தேசிய நிலையில் சீன வாக்காளர்களில் 94 விழுக்காட்டினர் நம்பிக்கை கூட்டணிக்கு வாக்களித்ததை ஒப்பிடுகையில் இது குறைவாகும் என்று அந்த மையம் தெரிவித்தது.

இது தஞ்சோங் பியாய் தொகுதியில் மசீசவிற்கு உள்ள அடிமட்ட தொண்டர்களின் ஆதரவைப் புலப்படுத்துகிறது. நம்பிக்கை கூட்டணிக்கு ஆதரவான ஓட்டுகள் தேசிய முன்னணி பக்கம் சாய்ந்தால் அல்லது மக்கள் வாக்களிக்கச் செல்லாமல் இருந்தால் அல்லது மற்ற வேட்பாளர்களுக்கு வாக்களித்தால், அவை வெற்றி பெறும் வேட்பாளரின் வாக்கு எண்ணிக்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் அது சுட்டிக் காட்டியது.

சீன வாக்காளர்களின் ஆதரவு பக்காத்தான் ஹாராப்பானில் இருந்து தேசிய முன்னணிக்கு மாறியதற்கு பக்காத்தான் அரசாங்கத்தின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது (59.1 %) , மத்திய அர்சாங்கத்தின் அடைவு நிலை மீதான அதிருப்தி  (59%),மாநில அரசாங்கத்தின் அடைவு நிலை மீதான அதிருப்தி  (53%) மற்றும் வாழ்க்கைச் செலவினம் அதிகரிப்பு  (60%) போன்ற காரணங்களும் அடங்கும் என்று அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.