கோலாலம்பூர் குடிநுழைவுத்துறையின் தீபாவளி கொண்டாட்டம் !

0
2

கோலாலம்பூர், நவ.15-

தீபாவளி பெருநாள் முடிந்து மூன்று வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், அதன் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக, மலேசியாவில் பல்லின மக்களிடையே ஒற்றுமையை ஊக்குவிக்கும் வகையில், ஆங்காங்கே தீபாவளி பொது உபசரிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கோலாலம்பூர் குடிநுழைவுத் துறையில் பணியாற்றும் இந்திய அதிகாரிகளின் ஏற்பாட்டில் தீபாவளி பொது உபசரிப்பு வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் ஹமிடி ஆடாம், இந்த தீபாவளி பொது உபசரிப்பில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார்.

குடிநுழைவுத் துறையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், ஆண்டுதோறும் தீபாவளி பொது உபசரிப்பு நடத்தப்படுவதாக, ஏற்பாட்டுக்குழு தலைவரும் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறையின் அந்நியத் தொழிலாளர்கள் பிரிவின் மூத்த துணை உதவி இயக்குனருமான சிவகுமார் சுப்பையா தெரிவித்தார்.

ஒன்பதாவது ஆண்டாக நடைபெற்ற இந்த தீபாவளி பொது உபசரிப்பு, சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தில், கோலாலம்பூர் குடிநுழைவுத் துறையின்அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கியதாக அவர் கூறினார். இதுபோன்ற உபசரிப்புகள், குடிநுழைவு இலாகாவில் பணிபுரியும் இதர இனத்தவர்கள், இந்தியர்களின் கலாச்சாரத்தை அறிந்துக் கொள்ள வழி வகுப்பதாக, அங்கு பணிபுரியும் சில இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில், சிலாங்கூர், செலாயாங்கைச் சேர்ந்த சுவீட் கேர் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தைச் சேர்ந்த 20 குழந்தைகளுக்கு, பள்ளி பைகளும் தீபாவளி அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் குடிநுழைவுத் துறையைச் சேர்ந்த மலாய்க்கார அதிகாரிகள் நடனங்களுக்கு அபிநயம் பிடித்த சம்பவம் வந்திருந்தவர்களைக் கவர்ந்தது.இந்நிகழ்ச்சிக்காக பல வாரங்களாக பயிற்சிகளை மேற்கொண்ட அவர்கள் இந்திய நண்பர்களின் வழிக்காட்டுதல்களுடன் தங்களின் அபிநயங்களை சிறப்பாக அரங்கேற்றினர். ஆடல், பாடல்களுடன் சுவையான விருந்து, நிகழ்ச்சியை மேலும் மெருகேற்றியது.