செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > டத்தோ ஶ்ரீ நஜிப்பின் விண்ணப்பத்தை நிராகரித்தார் நீதிபதி !
முதன்மைச் செய்திகள்

டத்தோ ஶ்ரீ நஜிப்பின் விண்ணப்பத்தை நிராகரித்தார் நீதிபதி !

கோலாலம்பூர், நவம்பர்.18-

1 எம்.டி.பி எனப்படும் ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம் தொடர்பான கணக்கறிக்கையில்  திருத்தங்களை செய்வதற்கு, முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப்புக்கு உடந்தையாக செயல்பட்டதாக, அதன் முன்னாள் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான அருள் கந்தா கந்தசாமி மீதான வழக்கு விசாரணை திங்கட்கிழமை மீண்டும் தொடங்கியிருக்கின்றது.

அவ்வழக்கு விசாரணையை ஒத்திவைக்கும்படி, நஜிப் செய்த விண்ணப்பத்தை, உயர் நீதிமன்ற நீதிபதி, முஹமட் சைனி நிராகரித்து வழக்கைத் தொடருமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட்டார். கடந்த நவம்பர் 13-ஆம் தேதி, டத்தோ ஶ்ரீ நஜீப் செய்த விண்ணப்பத்தில், திட்டமிட்ட தேதிகளில் தங்கள் இருவரிடம் இணைந்து விசாரணை நடத்தப்பட்டால், தாம் இவ்வழக்கில் பாராபட்சத்தைச் சந்திக்க நேரிடும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஏனெனில், எஸ்.ஆர்.சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பான வழக்கிற்கு தேவையான எதிர்தரப்பு வாதங்களைத் தயார் செய்வதற்கு தமக்கும் தமது வழக்கறிஞருக்கும் போதுமான மற்றும் நியாயமான கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அந்த விண்ணப்பித்தில் நஜீப் தெரிவித்திருந்தார்.

எஸ்.ஆர்.சி இண்டர்நேஷனல் நிறுவனத்திற்குச் சொந்தமான 4 கோடியே 20 லட்சம் ரிங்கிட் நிதியை மோசடி செய்ததாக, ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கும் பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினருமான நஜிப், வேறொரு உயர் நீதிமன்றத்தில் அவ்வழக்கை எதிர்கொள்வதற்கான தற்காப்பு வாதத்திற்கு தயாராகி வருகிறார்.

அவ்வழக்கு விசாரணை டிசம்பர் மூன்றாம் தேதி தொடங்கவிருக்கிறது.  அதே வேளையில் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி தொடங்கியிருக்கும் 1 எம்.டி.பி தொடர்பான வழக்கு விசாரணைக்கும் தற்காப்பு வாதங்களைத் தயார் செய்வதில் தமது வழக்கறிஞர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் நஜிப் அவ்விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும், நஜிப்பின் அவ்விண்ணப்பத்திற்கு, அருள் கந்தா மறுப்பு தெரிவித்திருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஒருவருக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்காமல் ஒவ்வொரு தனிநபர்களின் முக்கியத்துவத்தையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

ஆகவே, இந்த வழக்கு விசாரணையைத் தொடர்வதன் வழி, தமக்கு நீதி கிடைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார். இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞரான டத்தோ ஶ்ரீ கோபால் ஶ்ரீராம் தலைமையிலான குழு வாதாடுகின்றது. நஜிப் சார்பில், வழக்கறிஞர், டான் ஶ்ரீ முஹமட் ஷாபி அப்துல்லா தலைமையிலான குழுவும், அருள் கந்தா சார்பில் வழக்கறிஞர் டத்தோ என். சிவநாதன் தலைமையில் தற்காப்பு வாதங்கள் புரியவிருக்கின்றனர்.

நஜிப் மற்றும் அருள் கந்தா சம்பந்தப்பட்ட இவ்வழக்கை இணைந்து விசாரிப்பதற்கு, அரசு தரப்பு செய்த விண்ணப்பத்திற்கு, இவ்வாண்டு ஜனவரி நான்காம் தேதி, செஷன்ஸ் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன