தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் முடிவு: அம்னோ – பாஸ் ஒத்துழைப்பால் கிடைத்தது அல்ல! -கெராக்கான் தலைவர் கருத்து

0
4

கோலாலம்பூர், நவ.18-

தஞ்சோங் பியாய் வாக்காளர்கள் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை இந்த இடைத்தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளனரே தவிர அம்னோ மற்றும் பாஸ் ஒத்துழைப்பை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கெராக்கான் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் ஹோ சாய் தெரிவித்தார்.

தேசிய முன்னணியின் வெற்றியானது  மக்கள் அம்னோ – பாஸ் ஒத்துழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளதை பிரதிபலிப்பதாக ஹாடி அவாங் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ள இயலாத ஒரு கருத்தாகும். நாம் நன்கு ஆராய்ந்து பார்த்தால் மக்கள் நம்பிக்கை கூட்டணிக்கு பாடம் கற்பிக்க விரும்பியது தெளிவாகத் தெரிகிறது” என்றார் அவர்.

கடந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு 20,731 வாக்குகள் கிடைத்தன. இம்முறை 25,466 வாக்குகளை அது பெற்றது. பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால், நம்பிக்கை கூட்டணி முந்தைய தேர்தலில் பெற்றதைக் காட்டிலும் இம்முறை 10,000 வாக்குகளை இழந்துள்ளது என்று அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த இடைத் தேர்தல் முடிவானது கூட்டரசு அரசாங்கத்தை பாதிக்கவில்லை. எனவே, மக்கள் நம்பிக்கை கூட்டணியை தோற்கடிக்க தேசிய முன்னணிக்கு வாக்களித்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

தஞ்சோங் பியாய் வாக்காளர்கள் குறிப்பாக சீன வாக்காளர்கள்  அரசாங்கத்தின் இனவாத அரசியல் மீதான தங்களின் அதிருப்தியை தெளிவாகப் பதிவு செய்துள்ளனர். எனவே, மக்களின் நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள, அரசாங்கமும் தேசிய முன்னணியும் நியாயமான கொள்கை மற்றும் அமலாக்கத்தின் வழி உடனடியாக மிதவாத அரசியலுக்குத் திரும்ப வேண்டும் என்று அவர் நினைவுறுத்தினார்.

அதே வேளையில், நம்பிக்கை கூட்டணி யூஇசி அங்கீகாரம் உட்பட 14ஆவது பொதுத் தேர்தல் வாக்குறுதிகள்  அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் நினைவுறுத்தியுள்ளனர் என்றார் அவர்.

கெராக்கான் தொடர்ந்து மிதவாத மற்றும் பன்முக அரசியலைத் தற்காக்கும் என்றும் இனவாத மற்றும் சமய தீவிரவாதத்தை ஒரு போதும் ஆதரிக்காது என்றும் டோமினிக் லாவ் வலியுறுத்தினார்.