திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > பறக்கும் கார் சோதனை ஓட்டம்; கேலி செய்த எதிர்கட்சிகளுக்கு அமைச்சர் அழைப்பு
மற்றவைமுதன்மைச் செய்திகள்

பறக்கும் கார் சோதனை ஓட்டம்; கேலி செய்த எதிர்கட்சிகளுக்கு அமைச்சர் அழைப்பு

கோலாலம்பூர், நவ.18-

தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ ரெட்சுவான் முஹம்மட் யூசோப், வியாழக்கிழமை பறக்கும் காரில் சோதனை ஓட்டத்தை மேற்கொள்ளவுள்ளார். அதனை நேரில் பார்ப்பதற்கு வரும்படி, நாடாளுமன்றத்திலுள்ள எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இருவர் மட்டுமே அமரக்கூடிய அந்த பறக்கும் காரில், தன்னுடன் வர விரும்பினால், பாயா பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் ஷாஹார் அப்துல்லா வரலாம். அந்த பறக்கும் காரில் தன்னுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என டத்தோஸ்ரீ ரெட்சுவான் திங்கள்கிழமை மக்களவையில் கூறியுள்ளார்.

இதனிடையே, குறுக்கிட்டு பேசிய சபாநாயகர் தான் ஸ்ரீ முஹம்மட் அரிஃப் முஹம்மட் யூசோப், அந்த சோதனை ஓட்டத்திற்கு தன்னை அழைக்கவில்லை என கூறியது நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே சிரிப்பொலியை வர வைத்தது.

அவரது அக்கூற்றுக்கு பதிலளித்த டத்தோஸ்ரீ ரெட்சுவான், அன்றைய நாளில் மாலை மணி 2.00க்கு பிறகு நாடாளுமன்ற கூட்டத்தொடர் இல்லையென்றால், சுபாங்கிற்கு வரும்படி சபாநாயகருக்கு அழைப்பு விடுத்தார்.

இவ்வாண்டு, லங்காவியில் நடைபெற்ற அனைத்துலக விண்வெளி மற்றும் கடற்படை கண்காட்சியில், பறக்கும் கார் திட்டத்தை உள்ளூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மேற்கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அது சமூக ஊடகங்களில், கேலி கிண்டல்களுக்கு ஆளான நிலையில், அத்திட்டம் குறித்து எதிர்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தேகங்களை எழுப்பியிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன