திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > மகாதீரை பிரதமராக நீடிக்க வைக்க, அஸ்மின் அலி பயங்கர திட்டமா?
அரசியல்முதன்மைச் செய்திகள்

மகாதீரை பிரதமராக நீடிக்க வைக்க, அஸ்மின் அலி பயங்கர திட்டமா?

கோலாலம்பூர், நவ.19-

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கு நெருக்குதல்கள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், அதனைத் தடுக்கும் வகையில், பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி திங்கள்கிழமை இரவில், தனது இல்லத்தில், தேசிய முன்னணியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பை நடத்தியிருப்பதாக எஃப்.எம்.டி இணையத்தளபதிவேடு செய்தி வெளியிட்டுள்ளது.

இரவு விருந்தோம்பல் என கூறப்படும் அச்சந்திப்பில், அம்னோவின் முன்னாள் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசேன் உள்பட தேசிய முன்னணியின் சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அஸ்மின் அலியின் வீட்டின் அருகே, வெள்ளை நிறத்திலான டொயோட்டா அல்ஃபார்ட், கருப்பு நிறத்திலான புரோட்டோன் பெர்டானா கார்கள் உள்பட தனிப்பட்ட பாதுகாவலர்களும் போலீஸ்காரர்கள் இருந்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஜொகூர் தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில், பக்காத்தான் ஹராப்பான் படுதோல்வி கண்டது. அதனைத் தொடர்ந்து, அரசியல் விமர்சகர்கள் மகாதீர் பிரதமர் பொறுப்பை பி.கே.ஆர். தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

பிரதமர் பொறுப்பு எப்போது அன்வாரிடம் ஒப்படைக்கப்படும் என்பது குறித்து மகாதீர், தெளிவான தகவல்களை வழங்காமல் இருந்து வருகிறார். அன்வாரும் இன்னும் இரண்டு ஆண்டுகளில் தாம் பிரதமராக பொறுப்பேற்கவிருப்பதாக கூறி வருகிறார்.

இந்நிலையில், பி.கே.ஆரின் துணைத்தலைவரான அஸ்மின் அலி, தற்போது, மகாதீருடன் மிக நெருக்கமாக இருந்து வருவதோடு, அவர் பிரதமர் பொறுப்பில் நீடிக்க வேண்டுமெனவும் குரல் கொடுத்து வருகிறார்.

இதனிடையே, அஸ்மின் அலியின் வீட்டில் நடைபெற்ற அச்சந்திப்பில், வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சருமான ஸுராய்டா கமாருடினும் கலந்துக்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன