கோலாலம்பூர், நவ.19

பி.கே.ஆர் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ அஸ்மின் அலியின் வீட்டில் 22 தேசிய முன்னணி நாடாளுமன்ற  உறுப்பினர்கள் நடத்திய ரகசிய சந்திப்பு நாட்டின் அரசியலில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி மிகப் பெரிய தோல்வியை சந்தித்துள்ள வேளையில், இந்த சந்திப்பு ஊடகங்களுக்கு தீனிப் போட்டுள்ளது.

புத்ராஜெயாவில், பிரிசின்ட் 11-ல் இருக்கும் உள்ள அஸ்மினின் அதிகாரபூர்வ இல்லத்தில் இரவு 9.30 மணிக்கு அந்த சந்திப்பு தொடங்கியது. சுமார் இரண்டு மணி நேரம் அச்சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.  இந்த சந்திப்பில் கலந்துக் கொண்ட தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களிடம் எந்த ஒரு தகவலையும் வெளியிட மறுத்து விட்டனர்.

தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தவிர பி.கே.ஆர் கட்சியைச் சேர்ந்த வீடமைப்பு, ஊராட்சித்துறை சுராய்டா கமாரூடின், போக்குவரத்து துணை அமைச்சர் கமாரூடின் ஜபாரும் இச்சந்திப்பில் கலந்துக் கொண்டதாக கூறப்படுகிறது. தேசிய முன்னணியைச் சேர்ந்த ஜாசின் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஹம்சா, ஆராவ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சாஹிடன் காசிம், குவால் கூராவ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ டாக்டர் இஸ்மாயில் முஹமட், கிரீக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஹஸ்புல்லா ஒஸ்மான், பாயா பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் முஹமட் சாஹார் அப்துல்லா, ஜெலுபு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஜமாலுடின் அலியாஸ் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில், நம்பிக்கைக் கூட்டணி தோல்வி கண்டதை அடுத்து பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட்டை பதவி விலகுமாறு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வரும் வேளையில், அவரை தற்காக்க இந்த சந்திப்பை அஸ்மின் ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அம்னோவின் முன்னாள் உதவித் தலைவரும் செம்பூரோங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் துன் உசேன் ஓன் இந்த சந்திப்புக்கு சூத்திரதாரியாக செயல்பட்டுள்ளார் என்றும் பேசப்படுகிறது.