அஸ்மின் அலியுடன் சந்திப்பா? அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மீது ஒழுங்கு வாரியம் நடவடிக்கை

0
3

கோலாலம்பூர், நவ.19-

புத்ராஜெயாவில் பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியின் வீட்டில் நடந்த சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட சில அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது கட்சியின் கட்டொழுங்கு வாரியம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பிகேஆர் துணைத் தலைவருமான அஸ்மின் அலியைச் சந்தித்ததாக ஊடகம் மற்றும் தனிநபர்கள் வாயிலாக அறிய வந்ததாக அம்னோ கட்டொழுங்கு வாரியத்தின் தலைவர் டான்ஸ்ரீ அபாண்டி அலி கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பில் அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கப்பெறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கட்டொழுங்கு வாரியம் நடவடிக்கை எடுக்கும் என்று அறிக்கை ஒன்றின் வழி அவர் குறிப்பிட்டார்.

கட்சியின் நடப்பு சட்டவிதிகள் கீழ் இவ்விவகாரம் மீது உடனடியாக ஆராயப்படுவதோடு  தக்க நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றார் அவர்.

அம்னோ அரசியமைப்பு சட்ட விதிகள் கீழ் கட்டொழுங்கு வாரியத்திற்கு குறிப்பிட்ட சில அதிகாரங்களை கட்சி வழங்கியிருப்பதைத் தொடர்ந்து வாரியம் எந்தவொரு பாரபட்சமும் இன்றி தனது கடமையை நேர்மையான மற்றும் நியாயமான முறையில் மேற்கொள்ளும் என்றும் அபாண்டி கூறினார்.