அஸ்மின் அலியுடன் நடந்த சந்திப்பு கூட்டத்திற்கு ஹிஷாமுடின் தலைமையேற்றதாக லொக்மான் குற்றச்சாட்டு

0
3

கோலாலம்பூர், நவ.19-

புத்ராஜெயாவில் பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியின் வீட்டில் 22 தேசிய முன்னணி நாடாளுமன்ற  உறுப்பினர்களின் சந்திப்பு கூட்டத்திற்கு செம்ரோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஷாமுடின் ஹுசேன் தலைமையேற்றதாக அம்னோவின் உச்சமன்ற உறுப்பினரான லொக்மான் அடாம் குற்றம் சாட்டியிருக்கிறார்.

ஷிஹாமுடின் மீண்டும் மலேசியர்களுக்கு குறிப்பாக தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு துரோகம் செய்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட 22 தேசிய முன்னணி உறுப்பினர்களில் அனைவரும் மகாதீருக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள். தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலுக்கு தேசிய முன்னணியும் பாஸ் கட்சியும் கடினமாக உழைத்தனர். இந்த துரோகம் அவர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றமாக அமையும் என்பதை ஹிஷாமுடின் உணரவில்லையா என்று லொக்மான் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதனிடையே, இந்தச் சந்திப்புக் கூட்டத்தில் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 பேருடன் பி.கே.ஆர் கட்சியைச் சேர்ந்த வீடமைப்பு, ஊராட்சித்துறை சுராய்டா கமாரூடின், போக்குவரத்து துணை அமைச்சர் கமாரூடின் ஜபார் உட்பட பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 5 பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் அஸ்மின் அலியும் ஹிஷாமுடினும் மகாதீருக்கு நாடாளுமன்ற ஆதரவை பெறுவதிலும், அவருக்கு பிறகு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக வருவதை தடுப்பதிலும் முனைப்பு காட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் படுதோல்வியால் கூட்டணி தலைவர்கள் பலர் மகாதீர் குற்றம் சாட்டினர். இருப்பினும், அஸ்மின் அலி மகாதீருக்கு ஆதரவாகதான் இருந்தார்.