பொச்சடினோவை நீக்கியது டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் !

0
6

லண்டன், நவ.20 –

டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் நிர்வாகி பொறுப்பில் இருந்து மவுரிசியோ பொச்சடினோவை அதிரடியாக நீக்கியுள்ளார் அதன் உரிமையாளர் டேனியல் லெவி. இந்த பருவத்தில் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் தற்போது 14 புள்ளிகளுடன் 14 ஆவது இடத்தில் உள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்த டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் நிர்வாகம், பொச்சடினோவை அதிரடியாக நீக்கியுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் நிர்வாகியாக பொறுப்பேற்ற பொச்சடினோ கடந்த 5 ஆண்டுகளில் பலம் வாய்ந்த அணியாக உருவாக்கினார்.

கடந்த நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டிக்குத் தொடர்ச்சியாக தகுதிப் பெற செய்ததில் பொச்சடினோவுக்கு முக்கிய பங்கு உள்ளது. அதேவேளையில் 2019 ஆம் ஆண்டின் ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு, பொச்சடினோ டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பரைக் கொண்டு சென்றார் . இருப்பினும் இறுதி ஆட்டத்தில் 2-0 என்ற கோல்களில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் , லிவர்பூலிடம் தோல்விக் கண்டது.

2016, 2017 ஆம் ஆண்டுகளில் பிரீமியர் லீக் போட்டியில் , லெய்செஸ்டர் சிட்டி, செல்சி அணிகளுக்கு டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் மிகப் பெரிய மிரட்டலாக விளங்கியது. இத்தகைய சாதனைகளைப் படைத்திருந்தாலும் கடந்த சில மாதங்களாக டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் சரிவை சந்தித்திருப்பதால் அவரை உடனடியாக நீக்க அந்த கிளப்பின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.