இஸ்லாம் அல்லாதவர் என்பதற்காக அவதூறு பரப்புவதா; பாஸ் மீது லிம் குவான் எங் பாய்ச்சல்

0
1

கோலாலம்பூர், நவ.22-

ஒழுக்க நெறிமுறையைக் கொண்டிருந்தால், 2020 வரவு செலவு திட்டம் தொடர்பில், தன் மீது மோசமான அவதூறு மற்றும் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ள பாஸ் கட்சியின் துணைத்தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான், தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென நிதியமைச்சரான லிம் குவான் எங் சவால் விடுத்துள்ளார்.

மாநிலங்களுக்கான நிதிகளை ஒதுக்கீடு செய்ததில், சமநிலையற்ற முறையில் பரிசீலித்திருப்பதால், லிம் குவான் எங் நிதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டுமென துவான் இப்ராஹிம் நேற்று கூறியிருந்தது தொடர்பில் அவர் அவ்வாறு கருத்துரைத்தார்.

பினாங்கு மாநிலத்தின் மேம்பாட்டிற்காக 10 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஹலால் மையத்திற்கு 10 மில்லியன் ரிங்கிட் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் துவான் இப்ராஹிம் கூறியுள்ளார். அது பொறுப்பற்றதனமான அவதூறு. காரணம், அதில், உண்மையில்லை.

வரவு செலவு திட்டத்தை ஆராய்ந்தால், பினாங்கு மாநிலத்தின் மேம்பாட்டு செலவிற்கு 975.5 மில்லியன் ரிங்கிட் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர் கூறியது போல், 10 பில்லியன் ரிங்கிட் அல்ல. அதே போன்று, ஹலால் தொழில்துறை தொடர்பான திட்டங்களுக்கு 125.2 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாறாக, 10 மில்லியன் ரிங்கிட் அல்ல என லிம் குவான் எங் குறிப்பிட்டுள்ளார்.

இணையத்தில், ஆய்வை மேற்கொண்டால் ஒரு மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக்கானோர், நிதியமைச்சரை மாற்றுவதற்கு ஆதரவளிப்பார்கள் எனவும் துவான் இப்ராஹிம் கூறியிருந்தார்.

அது குறித்தும் கருத்துரைத்த லிம் குவான் எங், அரசாங்கத்தின் கொள்கையை நிர்ணயிக்கக்கூடிய அமைச்சர், முதலமைச்சர் முதலான பொறுப்புகளை, இஸ்லாம் அல்லாதவர்கள் வகிக்க தகுதியில்லை எனும் கொள்கையை பாஸ் கட்சி கொண்டுள்ளது. அக்கொள்கைக்கு ஏற்ப, அக்குற்றச்சாட்டு அமைந்திருப்பதாக கூறியுள்ளார்.

ஜொகூர், தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில், பாஸும் தேசிய முன்னணியும் சீன வாக்காளர்களிடமிருந்து வலுவான ஆதரவை பெற்றதற்கு பிறகு, அக்கட்சி அது போன்ற குறுகிய கொள்கைகளையும் உணர்வுகளை தைரியமாக வெளிப்படுத்த தொடங்கியுள்ளது.

இஸ்லாம் சமயத்தை அல்லாதவர் என்பதற்காக, தன் மீது கடுமையான அவதூறுகளையும் பொய்யான குற்றச்சாட்டுகளையும் சுமத்துவதற்கு, பாஸ் கட்சியின் தலைவருக்கு உரிமையுள்ளதா? எனவும் லிம் குவான் எங் கேள்வியெழுப்பியுள்ளார்.