கோலாலம்பூர், நவ.23-

எதிர்கட்சியான அம்னோவுடன் இணைந்து ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்கும் பரிந்துரையை பிரதமரும் பக்காத்தான் ஹாராப்பான் தலைவருமான துன் டாக்டர் மகாதீர் முகமட் நிராகரித்துள்ளார்.

ஊழல் புரிந்த தலைவர்களைத் தற்காத்ததாக, அம்னோ மீது கண்ணோட்டம் உள்ளது. அம்னோவின் பெயருக்கு அத்தகைய களங்கம் ஏற்படாமல் இருந்திருந்தால், தாம் அக்கட்சியைத் தேர்ந்திருக்கக்கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, அம்னோவின் தலைவர்களில் ஒருவரான டத்தோஸ்ரீ ஷாஹிடான் காசிம், தங்களுடன் இணைந்து ஒற்றுமை அரசாங்கத்தை துன் டாக்டர் மகாதீர் அமைக்க வேண்டும் என கூறியிருந்தார். அதே கூற்றை, அம்னோவின் பொதுச்செயலாளருமான டான்ஸ்ரீ அனுவார் மூசாவும் வலியுறுத்திய நிலையில், பிரதமர் அவ்வாறு கருத்துரைத்தார்.

அனுவார் மூசாவும் அவரது நண்பரான டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கும் பணத்தைத் திருடுவதற்காக, அம்னோவைப் பயன்படுத்தியுள்ளனர். ஆகையால், அது போன்ற கட்சியில் தாம், இணைய போவதில்லை எனவும் துன் டாக்டர் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பேசிய அவர், தனது தலைமைத்துவத்திற்கு ஆதரவளிக்கும் அம்னோ மற்றும் பாஸ் கட்சிக்கு நன்றியைக் கூறிக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.