கோலாலம்பூர், நவ.23-

புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள பதாகை உள்ள இடத்தில் தொழில்முனைவர் மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹமட் ரெட்சுவான் யூசோப் புகைப்பிடிக்கும் நிழற்படம் சமூகவலைத்தளங்களில் பெரும் வைரலானது.

உணவகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு, அரசாங்கம் தடைவிதித்துள்ளதோடு, அவ்வாறு புரியும் தரப்பினருக்கு அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமைச்சரே அந்த விதிமுறையைப் பின்பற்றவில்லை என கூறி, ரெட்சுவானுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட், அந்த அமைச்சர் மீது நடவடிக்கை எடுப்பாரா? எனவும் சவால்கள் விடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், அமைச்சரின் அச்செயல் குறித்து விளக்கம் அளித்துள்ளார் அவரது பத்திரிக்கை செய்தியாளர். அந்த நிழற்படம் ரெட்சுவான் அமைச்சர் ஆவதற்கு முன்பே எடுக்கப்பட்டதாகவும் அக்காலக்கட்டத்தில், பொது இடங்களில் புகைப் பிடிப்பதற்கான தடை கடுமையாக்கப்பட்டிருக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

அந்த நிழற்படம் குறித்து, தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டிருப்பதாகவும், ரெட்சுவானின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தவும் அவரை வீழ்த்தவும் வேண்டுமென்றே அவ்வாறான சர்ச்சை ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.