பெட்டாலிங் ஜெயா, நவ.23-

1.4 பில்லியன் மதிப்பிலான நெல் விவசாய டெண்டரை தேசிய தோட்ட அமைப்பான நாஃபாஸிற்கு வழங்கும்படி, பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டிற்கு தாம் கடிதம் எழுதியிருந்ததை விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சாலாஹுடின் ஆயுப் ஒப்புக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், அவரது அச்செயல் குறித்து, மலேசிய அனைத்துலக வெளிப்படைத்தன்மை அமைப்பு (டி.ஐ.-எம்), ஊழல் மற்றும் வாரிசு அரசியலை எதிர்க்கும் மையம் (சி4) உள்ளிட்ட அரசு சார்பற்ற அமைப்புகள் சாடியுள்ளன.

ஆதரவு கடிதங்களை வழங்குவதை எதிர்ப்பதாக பக்காத்தான் ஹராப்பான் தனது நிலைப்பாட்டை தெரிவித்திருந்தது. தற்போது, அக்கூட்டணியே அத்தகைய கடிதத்தை வழங்கியிருப்பது ஏற்புடையது அல்ல என டி.ஐ.-எம்-மின் தலைவரான முஹம்மட் மோஹன் தெரிவித்துள்ளார். அந்த ஆதரவு கடிதத்திற்கான எண்ணம் சரியானதாக இருக்கலாம். ஆனால், கொள்கை அடிப்படையில் அது தவறு எனவும் அவர் கூறியுள்ளார்.

அந்த ஆதரவு கடிதம், சம்பந்தப்பட்ட டெண்டரை பெறுவதில் ஈடுபடும் தரப்பினருக்கு நியாயமற்றதாக இருக்கும். டெண்டரை வழங்குவதில், நிர்ணயிக்கப்பட்ட ஆற்றல் இருக்கின்றதா? என்பதன் அடிப்படையில் மதிப்பிட வேண்டும். மாறாக, அதில், ஆதரவு கடிதம் முக்கியமானதாக இருக்கக்கூடாது எனவும் முஹம்மட் மோஹன் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, சி4 மையத்தின் நிர்வாக இயக்குநரான சிந்தியா கேப்ரில், டெண்டர் விவகாரங்களில் பக்காத்தானின் முதன்மை அமைச்சரான சாலாஹுடின் ஆயுப் தலையிடுவது அவமானத்திற்குரிய ஒன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.