மகாதீரின் அறிக்கை பக்காத்தானின் சீர்த்திருத்த கொள்கைக்கு முரணாக உள்ளது! -ராம்கர்ப்பால்

0
7

பெட்டாலிங் ஜெயா, நவ.23-

அமைச்சர்கள் டெண்டர்களை வழங்கலாம் எனும் பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் கூற்று அதிர்ச்சியளிக்கின்றது. அது, பக்காத்தான் ஹராப்பான் கொண்டிருக்கும் சீர்த்திருத்த கொள்கைக்கு முரணாக இருப்பதாக புக்கிட் கெளுகோர் நாடாளுமன்ற உறுப்பினரான ராம்கர்ப்பால் சிங் தெரிவித்துள்ளார்.

மகாதீரின் அக்கூற்றின் காரணமாக, அமைச்சர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப, டெண்டர்களை வழங்கும் சூழ்நிலை ஏற்படும்.

எனவே, டெண்டர்கள் விவகாரத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் அமைச்சர்களிடம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என ராம்கர்ப்பால் கேட்டுக்கொண்டுள்ளார்.

டெண்டர்களை பெறுவதற்கான நடைமுறையின் போது, வெளிப்படைத்தன்மையையும், அதனை பெற விரும்புகின்றவர்களிடையே போட்டித்தன்மையை அதிகரிப்பதை ஊக்குவிக்கவும் வகையில், திறந்த டெண்டர்களை கொண்டு வர வேண்டும் என்பதில் பக்காத்தான் ஹாராப்பான் தீவிர முனைப்பைக் காட்டி வருகின்றது.

இந்நிலையில், பிரதமர் எதன் அடிப்படையில், அக்கூற்றை முன்வைத்தார் என்பது தமக்கு தெரியவில்லை. ஒருவேளை, அமைச்சர்கள் தங்களின் அதிகாரத்திற்கு உட்பட்டோ அல்லது அதிகாரத்திற்கு அப்பாற்பட்டோ நேரடி டெண்டர்களை வழங்குவதற்கான உரிமை உள்ளது என்றால், தார்மீக ரீதியாக அது தவறாகும். காரணம், வேண்டியவர்களுக்கு டெண்டர்களை வழங்கும் போக்கினை அது ஏற்படுத்திவிடும் என அஞ்சப்படுவதாகவும் ராம்கர்ப்பால் குறிப்பிட்டுள்ளார்.