கோலாலம்பூர், நவம்பர் 24-

‘சொல்வது ஒன்று, செய்வது வேறு’ என்பதே பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டின் சட்ட கொள்கையாகும் என ஹிண்ட்ராப் 2.0 தலைவர் பி.உதயகுமார் கூறியிருக்கிறார்.

நாட்டில் இந்தியர்கள் எதிர்நோக்கிவரும் குடியுரிமை பிரச்னைகள் குறித்து பேசுகையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

100 நாட்களுக்கு இந்தியர்களின் குடியுரிமை பிரச்னைகள் தீர்வு காணப்படும், நாட்டிலுள்ள 526 தமிழ்ப்பள்ளிகளுக்கும் முழுமையாக உதவிகள் வழங்கப்படும் என கடந்த 14ஆவது பொது தேர்தலில் நம்பிக்கை கூட்டணி தேர்தல் வாக்குறுதிகள் வழங்கியது. ஆனால், அதில் எந்த மாற்றமும் இல்லை. மகாதீர் சட்ட கொள்கையில் அவர் சொல்வது வேறு, செய்வது வேறாக உள்ளது என்று உதயகுமார் கூறினார்.

இன்று பிரிக்பீல்ட்ஸில் நடைபெற்ற ஹிண்ட்ராபின் 12ஆம் ஆண்டு ஒன்று கூடல் நிகழ்வின்போது செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

தேர்தல் கொள்கை அறிக்கையில் இந்திய சமூகத்திற்கு அளித்த 25 வாக்குறுதிகளை நிறைவேற்றும்படி மகாதீர் மற்றும் பக்காத்தான் அரசாங்கத்தை ஒரு வழக்கறிஞருமான உதயகுமார் கேட்டுக் கொண்டார்.

மகாதீரும் நம்பிக்கை கூட்டணி தலைமைத்துவமும் இந்த பிரச்னைகள் எல்லாம் தீர்வு காணப்படும் என 14ஆவது பொதுத் தேர்தலின் போது இவர்கள் இந்திய சமுகத்திடம் வாக்குறுதி அளித்திருந்தனர். தற்போதைய பிரச்னைகளுக்கெல்லாம் இவர்கள் தீர்வு காண போகிறார்களா அல்லது அம்னோவை போல இன பிரச்னையை தொடர்ந்து மேற்கொள்ளப்போகிறார்களா என்பதே தற்போதைய கேள்வியாகும் என்று அவர் சொன்னார்.

கடந்த 2007ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி நடந்த ஹிண்ட்ராபில் சுமார் 100,000 பேர் கலந்து கொண்டனர். ஆனால், இன்று நடைபெற்ற ஹிண்ட்ராபின் ஒன்று கூடல் நிகழ்வில் 100 பேர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். நம் சமுதாய ஒற்றுமையைச் சீர்குலைப்பதில் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது என்பது இதில் தெரிகிறது என்று அவர் கூறினார்.

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற கூட்டங்களில் இந்தியர்களின் பிரச்னைகள் செவிமடுக்கப்படும் வகையில் இந்தியர்கள் அதிகமாக வாழும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளில் தங்களுக்கென இடங்களை ஒதுக்கும்படி இந்திய சமுகத்தை தாங்கள் வலியுறுத்த விரும்புவதாகவும் உதயகுமார் தெரிவித்தார்.

இதுவே நாம் முன்னேற்றம் காண்பதற்கான வழி, இதை தவிர வேறு வழியில்லை. இந்திய பிரதிநிதிகளும் தற்போது தைரியமாக குரல் எழுப்ப மாட்டார்கள். அவர்கள் சீனர் மற்றும் மலாய்க்காரர்களால் வெற்றி பெற்றிருப்பதால் அவர்கள் நாடாளுமன்றத்திலோ அல்லது வேறு இடங்களிலோ குரல் எழுப்பமாட்டார்கள். நம்மை பிரதிநிதித்து 4 அமைச்சர்கள் இருந்தும் மலாய்க்காரர்கள் மற்றும் சீனர்களின் ஆதரவு வேண்டும் என்பதால் அவர்கள் நமக்கு குரல் கொடுப்பதில்லை. எனவே, நாடாளுமன்ற தொகுதிகளில் நமக்கென இடங்களை நாம் உருவாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.