திங்கட்கிழமை, ஜனவரி 20, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > போலீசால் தொந்தரவா? சொஸ்மாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவரின் மனைவி புகார்!
குற்றவியல்மற்றவைமுதன்மைச் செய்திகள்

போலீசால் தொந்தரவா? சொஸ்மாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவரின் மனைவி புகார்!

கோலாலம்பூர், நவ.25-

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துடனான தொடர்பு காரணமாக, டிஏபியைச் சேர்ந்த காடேக் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினரான ஜி.சாமிநாதன், சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவரது மனைவியான வி.உமா தேவி, உதவியாளர் கே.ஜெயசுதா ஆகிய இருவரும், தங்களுக்கு தொந்தரவுகள் அளிக்கப்படுவதாக கூறி, இன்று மலேசிய மனித உரிமை ஆணையத்தில் (சுஹாக்காம்) புகார் அளித்துள்ளனர்.

11 பேர் அடங்கிய குடும்பத்தைச் சேர்ந்த உமாதேவி, தனது குடும்பத்திற்கு, புக்கிட் அமான் போலீசைச் சேர்ந்தவர் எனக் கூறிக்கொண்ட ஆடவர் ஒருவர், தொலைப்பேசி வாயிலாக அழைத்ததாகவும், தனது கணவரை விடுவிப்பதற்கு இலஞ்சமாக பணத்தைக் கேட்டதாகவும் புகார் அளித்துள்ளார்.

அந்த ஆடவர் தனது பெயரைக் குறிப்பிடவில்லை. தன்னை நேரடியாக வந்து சந்திக்கும்படி, தாம் கூறியதற்கு பிறகு, அந்த ஆடவரிடமிருந்து எந்த அழைப்புகளும் வரவில்லை. அந்த அழைப்பு போலீசிடமிருந்து வந்திருக்கலாம் என சந்தேகிப்பதால், தாம் போலிசில் புகார் அளிக்கவில்லை என உமாதேவி கூறியுள்ளார்.

அதேப்போல், தனக்கும் போலீசிடமிருந்து அத்தகைய அழைப்பு கிடைத்ததாக கூறியுள்ள ஜெயசுதா, சாமிநாதனை விடுவிப்பதற்காக பிரார்த்தனை ஏற்பாடு செய்யப்பட்ட போது, அதில், எத்தனை பேர் கலந்துக்கொள்வார்கள் என்ற கேள்வியை அந்நபர் முன்வைத்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த நிகழ்ச்சி உள்பட பேஸ்புக்கில் எதனையும் பதிவிட வேண்டாம். அவை வைரலாக்கப்படுவதால், பதிவிட்டதை நீக்கும்படி அந்நபர் கூறியதாகவும் ஜெயசுதா குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, அந்த புகார் குறித்து சுஹாக்காம் விசாரணை மேற்கொள்ளவிருப்பதாக அதன் ஆணையரான ஜெரால்ட் ஜோசப் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன