கோலாலம்பூர், நவ.25-

பேராக்கிலுள்ள தாப்பா சிறையில், தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட சிவ ராஜா ராமன் (வயது 30) மரணமடைந்து 33 மாதங்கள் ஆகி விட்டன. அவரது மரணம் குறித்து விசாரணையை மேற்கொள்ள ஈப்போ, உயர்நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டிருந்தது.

இன்று வரையில், அந்த விசாரணை நடத்தபடாதது ஏன்? என சிவ ராஜாவின் குடும்பத்தினர் கேள்வியெழுப்பியுள்ளனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி விடுவிக்கப்படவிருந்த சிவ ராஜா அதே நாளில் மரணமடைந்தார். அவரது மரணத்திற்கான காரணம் குறித்து இன்றுவரையில் இறந்தவரது குடும்பத்தினருக்கு தெரியவில்லை என வழக்கறிஞர் எம்.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இன்று சிவ ராஜாவின் குடும்பத்தினருடன் செய்தியாளர்களைச் சந்தித்த விஸ்வநாதன் அவ்வாறு கூறியுள்ளார்.

8 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவித்த சிவ ராஜா விடுவிக்கப்பட வேண்டிய நாளில்தான் உயிரிழந்துள்ளார். அவரது மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவதற்கு மரண விசாரணையை மேற்கொள்ளும்படி சிவ ராஜாவின் தாயார் முனியம்மா ராமன் கடந்தாண்டு செப்டம்பர் 3ஆம் தேதி மனு செய்திருந்தார். அவரது மனுவிற்கு ஈப்போ உயர்நீதிமன்றம் அதே ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி அனுமதி வழங்கியிருந்தது.

தன் மகன் மீதான உடற்கூறு சோதணை அறிக்கையை தாப்பா மருத்துவமனை ஏன் இன்னும் வழங்கவில்லை. அச்சோதணைக்கு பிறகு அந்த அறிக்கை தயாராகியிருக்க வேண்டும் தானே? அந்த மருத்துவமனை அறிக்கையை வழங்காதது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சூல்கிப்ளி அஹ்மாட் விளக்கம் அளிக்க வேண்டும்.

அந்த திடிர் மரணத்திற்கான விவகாரத்தில் ஏன் தீர்வு இல்லை என்பதை உள்துறை அமைச்சரான டான்ஸ்ரீ முஹிடின் யாசின் விளக்க வேண்டும். தடுப்புக் காவலில் உள்ள கைதி உயிரிழந்தால், அதனைக் கையாளுவதற்கான பணியிட நடைமுறை என்ன?

நீதிமன்ற உத்தரவிற்கு பின்னரும், சிவ ராஜாவின் மரணம் மீதான விசாரணையை மேற்கொள்ளப்படாதது குறித்து பிரதமர்துறையின் சட்டம் மற்றும் நாடாளுமன்றம் தொடர்பான அமைச்சரான டத்தோ லியூ வுய் கியோங் விளக்கமளிக்க வேண்டும் எனவும் விஸ்வநாதன் வலியுறுத்தினார்.