கடைசி நிமிட கோலால் வெற்றிப் பெற்ற மென்செஸ்டர் சிட்டி

0
13

லண்டன், ஆக.27-
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் ரஹிம் ஸ்டெர்லிங் அடித்த கடைசி நிமிட கோலால் மென்செஸ்டர் சிட்டி வெற்றி பெற்றது. சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி 2-1 என்ற கோல்களில் போர்னிமோத்தை வீழ்த்தியது. ஆட்டம் தொடங்கிய 13 ஆவது நிமிடத்தில் சார்லி டேனியல்ஸ் அடித்த கோலின் வழி போர்னிமோத் முன்னணிக்கு சென்றது.

எனினும் எட்டு நிமிடங்களுக்குப் பின்னர் கப்ரியல் ஜீசஸ் மூலம் மென்செஸ்டர் சிட்டி ஆட்டத்தை சமப்படுத்தியது. அந்த கோலை அடுத்து மென்செஸ்டர் சிட்டி தனது தாக்குதல்களை அதிகரித்தது.எனினும் முதல் பாதி ஆட்டம் எந்த ஒரு கூடுதல் கோலின்றி முடிந்தது. இரண்டாம் பாதி ஆட்டத்தில் போர்னிமோத்தின் தற்காப்பு அரணை உடைக்க மென்செஸ்டர் சிட்டி கடுமையாக போராடியது. ஆட்டம் சமநிலையில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், ரஹிம் ஸ்டெர்லிங் 97 ஆவது நிமிடத்தில் மென்செஸ்டர் சிட்டியின் வெற்றி கோலை அடித்தார்.

எனினும் கோலை அடித்தப் பின்னர் ரசிகர்கள் இருக்கும் இடத்தை நோக்கி ஓடி அந்த வெற்றியை ரஹிம் ஸ்டெர்லிங் கொண்டாடியதால் அந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நடுவர் ரஹிம் ஸ்டெர்லிங்க்கு இரண்டாவது மஞ்சள் அட்டையக் கொடுத்து திடலை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார். ஆட்டம் 2-1 என்ற கோல்களில் மென்செஸ்டர் சிட்டிக்கு சாதகமாக முடிந்தது.