சனிக்கிழமை, ஜனவரி 25, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > சொஸ்மா: சாமிநாதனுக்கு ஜாமினா? வெள்ளிக்கிழமை தெரியவரும்!
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

சொஸ்மா: சாமிநாதனுக்கு ஜாமினா? வெள்ளிக்கிழமை தெரியவரும்!

கோலாலம்பூர், நவ.27-

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்ததாக, 2012ஆம் ஆண்டு சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள காடேக் சட்டமன்ற உறுப்பினர், ஜி.சாமிநாதனுக்கு ஜாமின் வழங்கப்படுமா இல்லையா என்பது குறித்து வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படுமென உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அந்த இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்ததாகவும் அது தொடர்பான பொருட்களை வைத்திருந்ததாகவும் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள 34 வயதான சாமிநாதன் தற்போது, சுங்கை பூலோ சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை மணி 4.30 தொடங்கி இரவு மணி 8.00 வரையில், சாமிநாதன் மீதான வழக்கின் விசாரணையில், அவரது வழக்கறிஞர் ராம்கர்ப்பால் சிங், அரசு தரப்பு வழக்கறிஞர் முஹம்மட் இஸ்கண்டார் அஹ்மாட், முன்வைத்த வாதங்களை நீதிபதி முஹம்மட் நஸ்லான் முஹம்மட் கசாலி செவிமடுத்தார்.

முன்னதாக பேசிய ராம்கர்ப்பால், ஜாமின் மீதான மனுவை அங்கீகரிப்பதற்கும் நிராகரிப்பதற்குமான அதிகாரத்தை நீதித்துறை கொண்டுள்ளது. அதில், நிர்வாக அமைப்பு தலையிட முடியாது என தெரிவித்திருந்தார். ஜாமின் வழங்குவது நீதிமன்றத்திற்கு எளிதானது அல்ல. ஆயினும், தனது பிரதிவாதியான சாமிநாதன் ஜாமினைப் பெறுவதற்கான உரிமை நேரடியாக மறுக்கப்படுவது ஏற்புடையது அல்ல எனவும் அவர் வாதிட்டார்.

இதனிடையே, இஸ்கண்டார் கூறுகையில், கூட்டரசு அரசியலைமைப்பு மற்றும் சட்டத்தின் அடிப்படையில், சொஸ்மா சட்டம் அதிகாரப்பூர்வமானது. அதன் கீழ் உள்ள சட்டங்கள் மாறுப்பட்டது. அதனை இதர குற்றச்செயல்களுக்கான சட்டங்களுடன் சமப்படுத்தக்கூடாது என தெரிவித்தார்.

மேலும், சாமிநாதனுக்கு ஜாமின் வழங்கப்பட்டால், மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகள் நடைபெறக்கூடும் என்ற அச்சம் நிலவுகின்றது. சொஸ்மாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில், சிறார்கள், பெண்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் ஆகியோருக்கு மட்டுமே ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட வேண்டுமெனவும் இஸ்கண்டார் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன