அமைச்சரவையிலிருந்து அஸ்மின் அலி நீக்கமா? மகாதீர் பதில்

0
11

கோலாலம்பூர், டிச.10-

பி.கே.ஆர். தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும் அதன் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலிக்கும் இடையிலான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

அண்மையில் மலாக்காவில் நடைபெற்ற பி.கே.ஆரின் மாநாட்டில், தலைவர் உரை ஆற்றிய போது, அன்வார் சி கித்தோல் எனப்படும் கதாப்பாத்திரத்தைச் சுட்டிக்காட்டி பேசியிருந்தார்.

அவருக்கு பிறகு, பேசிய பேராளர்கள் அஸ்மினை தாக்கும் வகையில் பேசினர். இதனால், அதிருப்தி அடைந்திருந்த அஸ்மினும் அவரது ஆதரவாளர்களும் மாநாட்டைப் புறக்கணித்தனர்.

பி.கே.ஆரின் கடைசி நாள் மாநாட்டில் கலந்துக்கொள்ளாத அஸ்மின் அலி, அக்கட்சியின் உதவித்தலைவரான ஜூராய்டா கமாருடின் முதலானோர், அதே நாள் இரவில் 2030 ஒரு விருந்தோம்பலை நடத்தினர்.

அதில், ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசிய ஜூராய்டா, ஓரினசேர்க்கை தொடர்பான காணொளியில் இருப்பது அஸ்மின்தான் என அன்வார் தம்மை நம்ப வைத்ததாக கூறியிருந்தார்.

மேலும், அச்சந்திப்பில், பொருளாதார விவகார அமைச்சரான அஸ்மினை நீக்குவதற்கு பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் உத்தரவிட்டிருப்பதாகவும் அன்வார் கூறியதாக ஜூராய்டா கூறியிருந்தார்.

இந்நிலையில், திங்கள்கிழமை ஏஜெண்ட் அலி டெ மூவி எனும் உள்ளூர் திரைப்படத்தைப் பார்த்த மகாதீரிடம், ஜூராய்டா கூறியதைப் போல், அமைச்சரவையிலிருந்து அஸ்மின் அலியை நீக்குவதற்கு உத்தரவு வழங்கியது உண்மையா? என்ற கேள்வியைச் செய்தியாளர்கள் முன்வைத்தனர்.

ஆனால், அது தேவையில்லாதது. அதைப்பற்றி கேள்வியெழுப்ப வேண்டாமென மகாதீர் பதிலளித்தார்.