கோலாலம்பூர், டிச.10-

முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்ற தாரக மந்திரத்தை மனதில் விதைத்து கடைசி நிமிடம் வரை போராட்டம் நடத்தியதால் இன்று பூப்பந்து விளையாட்டில் தங்க தாரகையாக வலம் வர முடிந்ததாக தேசிய பூப்பந்து வீராங்கனை கிஷோனா செல்வதுரை தெரிவித்துள்ளார். 30 ஆவது சீ விளையாட்டுப் போட்டியில் மகளிர் ஒற்றயர் பிரிவில் கிஷோனா ,20-22, 21-14, 21-13 என்ற புள்ளிகளில் இந்தோனேசியாவின் ரூசிலி ஹர்த்தானோவை வீழ்த்தி  மலேசியாவுக்கு தங்கப் பதக்கம் பெற்று தந்தார்.

21 வயதுடைய கிஷோனா, உலகத் தரவரிசையில் 104 ஆவது இடத்தில் உள்ளார். சீ விளையாட்டுப் போட்டியின் பூப்பந்து விளையாட்டில் மகளிர் ஒற்றயர் பிரிவில் நடப்பு வெற்றியாளரான கோ ஜின் வேய் பங்கேற்க முடியாத நிலையில் கடைசி நிமிடத்தில் கிஷோனா தேசிய அணியில் இணைக்கப்பட்டார்.

கோ ஜின் வேய் இல்லாத பட்சத்தில் தேசிய பூப்பந்து அணியின் தங்கப் பதக்க இலக்கும் இரண்டாக குறைக்கப்பட்டது. எனினும் அத்துணை ஆருடங்களையும் முறியடித்து , கிஷோனா தங்கம் வென்று அதிரடி படைத்துள்ளார். கடைசி நிமிடத்தில் அழைக்கப்பட்டாலும், சீ விளையாட்டுப் போட்டியில் தமது முழுத் திறமையை வெளிப்படுத்த கிஷோனா உறுதிப் பூண்டார். மகளிர் ஒற்றயர் பிரிவில் தங்கப் பதக்கம் வெல்வதற்கு மிகப் பெரிய சவாலை சந்தித்ததாக கிஷோனா அநேகனிடம் தெரிவித்தார்.

இந்தப் போட்டியில் தம்மை விட உலகத் தரவரிசையில் இருக்கும் முன்னணி ஆட்டக்காரர்களை எதிர்கொள்ள வேண்டும் என்ற நிலை இருந்தாலும் கடைசி வரை போராட வேண்டும் என தமது மனதுக்குள் உறுதிக் கொண்டதாக கிஷோனா தெரிவித்தார். அதேவேளையில் தம்முடைய குடும்ப உறுப்பினர்களும், குறிப்பாக பெற்றோர் தமக்கு கொடுத்த ஆதரவை மறுக்க இயலாது என அவர் மேலும் சொன்னார்.

எதிரில் இருக்கும் ஆட்டக்காரர்களைக் கண்டு மிரளாமல் உன்னால் சிறந்த ஆட்டத்தை வழங்க முடியும் என அவர்கள் தமக்கு வழங்கிய ஆதரவும் வெற்றிக்கு ஒரு காரணம் என கிஷோனா தெரிவித்தார்.இனி வரும் அனைத்துலக பூப்பந்து விளையாட்டுப் போட்டிகளிலும் சிறந்த அடைவுநிலையை வெளிப்படுத்த தாம் எண்ணம் கொண்டுள்ளதாக கிஷோனா மேலும் தெரிவித்தார்.