பினாங்கு டிச 10-

பினாங்கு, பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளியில், அக்கினி வேள்வி நடத்தப்பட்டது.முழுக்க முழுக்க தமிழிலேயே நடத்தப்பட்ட இந்த வேள்வியை, தமிழகத்தைச் சேர்ந்த செந்தமிழ் வேள்விச் சதுரர், சித்தாந்த கவிமணி, முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஆகம விதிமுறைகளுடன் நடத்தி வைத்தார்.

பள்ளி தலைமையாசிரியர் சி.சங்கா பொறுப்பேற்று நடத்திய இந்த வேள்வி நிகழ்ச்சியில் அப்பள்ளியில்  பயிலும் மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களும் பெற்றோர்களும், சுற்று வட்டாரப் பொது மக்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில், தமிழிலேயே இந்த வேள்வியை நடத்திய முனைவர் சத்தியவேல், இந்து சமய சித்தாந்த வழிமுறைகளில், தமிழர்கள் கையாள வேண்டிய வாழ்க்கை நெறிகளால் உண்டாகும் நன்மைகளை பட்டியலிட்டு, அவற்றின் மகிமையை அனைவரும் பின்பற்றுவது அவசியமென்று வலியுறுத்தினார்.

இந்து சமய தத்துவங்களை அறிந்து கொள்வதன் மூலம், வாழ்வில் மேம்படும் வழிகள் இயல்பாகவே புலப்படுமென்றும், இதனால் பக்குவ நிலை அடைந்து பண்போடும் ஒழுக்கத்தோடும் சிறந்து விளங்கும் தன்மையில் நம்மை உயர்த்திக் கொள்ள முடியுமென்றும் சத்தியவேல் கூறினார்.