கோலாலம்பூர், டிச.10-

பி.கே.ஆரின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில், பாலியல் தொடர்பான குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தாலும், அவரிடம் பிரதமர் பொறுப்பை கண்டிப்பாக ஒப்படைப்பேன் என துன் டாக்டர் மகாதீர் முகமட் மீண்டும் உறுதியளித்துள்ளார்.

ஆயினும், அடுத்தாண்டு நவம்பரில் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் ஆசிய பசிபிக் பொருளாதார உச்சநிலை மாநாட்டிற்கு முன்பதாக பிரதமர் பொறுப்பை தாம் அன்வாரிடம் ஒப்படைக்கப் போவதில்லை. மாறாக, அந்த மாநாட்டிற்கு பின்னரே, தாம் பிரதமர் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்கக்கூடுமென துன் மகாதீர் கூறியுள்ளார்.

‘’அந்த மாநாட்டிற்கு முன்பதாக நான் பிரதமர் பதவியை ஒப்படைத்தால், அது அம்மாநாட்டிற்கு இடையூறை ஏற்படுத்திவிடும். அன்வாரிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பேன் வாக்குறுதி அளித்துள்ளேன். நிச்சயமாக அதனை நான் நிறைவேற்றுவேன். மக்கள் அன்வாரை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அது அவர்களது விவகாரம்’’ என ரியூட்டர்ஸ்க்கு அளித்த நேர்க்காணலில் துன் மகாதீர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2020ஆம் ஆண்டு டிசம்பருக்குள் பிரதமர் பொறுப்பு அன்வாரிடம் ஒப்படைக்கப்படுமா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டபோது, அப்போதைய கால சூழ்நிலையைப் பொறுத்திருந்து பார்ப்போம் எனவும் துன் மகாதீர் கூறியுள்ளார்.