கோலாலம்பூர், டிச.10-

கொலைச் செய்ய முயன்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், என்.தர்மேந்திரன் கடந்த 2013-ஆம் ஆண்டு 10 நாள் போலீஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் திடிரென உயிரிழந்தார்.

கணவரின் மரணத்தைத் தொடர்ந்து, தர்மேந்திரனின் மனைவியான மேரி மரியாய் சூசை, அரசாங்கம் மற்றும் போலீஸிற்கு எதிராக 2016ஆம் ஆண்டு இழப்பீடுக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்நிலையில், அவ்வழக்கில் தர்மேந்திரனின் மனைவிக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு இழப்பீடாக ரிம 490,000 வெள்ளியை வழங்குவதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தர்மேந்திரனைப் போலீஸ் தாக்கியதற்கான ஆதாரங்களையும் அவ்வழக்கை மூடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் மேரி நிரூப்பித்திருப்பதாக, நீதிபதி அஹ்மாட் ஜைடி இப்ராஹிம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அந்த தீர்ப்பு குறித்து மேரியின் வழக்கறிஞரான என்.சுரேந்திரன் மகிழ்ச்சி தெரிவித்திருப்பதோடு அவருக்கு நீதி கிடைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆயினும், அந்த தீர்ப்பு மேரிக்கு முழுமையான மகிழ்ச்சியை அளிக்கவில்லை. அவரது கணவரின் மரணத்திற்கு காரணமானதாக கூறப்படும், நான்கு போலீஸ்காரர்களை விடுவிக்கும் தீர்ப்பை கூட்டரசு நீதிமன்றம் கடந்தாண்டு நிலைநிறுத்தியிருந்தது. அது நீதித்துறையின் தோல்வியாக அமைந்திருப்பதாக சுரேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.