கோலாலம்பூர், டிச. 11-

மறுமலர்ச்சி போராட்டத்தின் பேரில் கடந்த 2004 ஆம் ஆண்டில் கெஅடிலான் கட்சியில் இணைந்த ‘ செகு சேகர்’ என்றழைக்கப்படும் கே. குணசேகரன் குப்பன்  இக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ  அன்வார் இப்ராகிமிற்கு திறந்த மடல் ஒன்றை அனுப்பினார்.

தேசிய முன்னணி அம்னோவை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம் தன்னை வெகுவாகக் கவர்ந்த காரணத்தினால் இக்கட்சியில் தான் இணைந்ததாக குணசேகரன் குறிப்பிட்டார்.

“இதற்கு முன்பு நான்  எந்தவொரு கட்சியிலும்  இணையவில்லை. அதோடு, எந்தவோர்  அரசியல் தலைவருக்காகவும் நான் போராட்டத்தில் இறங்கவில்லை. மலேசிய மக்களின் உரிமைக்காகப் போராட வேண்டும் என்பதே எனது குறிக்கோள்”.

11ஆவது பொதுத் தேர்தல் தொடங்கி  2008 ஆம் ஆண்டு கோத்தா ராஜா கிளையின் தகவல் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டது வரை கட்சியில் இணைந்து செயலாற்றி வருகிறேன். 2018 ஆம் ஆண்டு வரை சிலாங்கூர் தகவல் பிரிவு துணைத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தேன்.   இப்போது நான்  வெறும்  சாதாரண உறுப்பினரே.

கட்சியின் விசுவாசமிக்க உறுப்பினர் என்ற வகையில் மலாக்கா அனைத்துலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற 2019 தேசிய மாநாட்டில் கல‌ந்து கொ‌ண்டேன். முதன் முறையாக மாநாட்டில் கலந்து கொண்ட  எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காரணம் மாநாடு கட்சித் தலைவருடன் மாறுபட்ட கருத்துடைய தலைவர்களைத் தாக்கும் களமாக மாறியதைக் கண்டேன்.

கட்சித்  தலைமைச் செயலாளரின் மேற்பார்வையின்   கீழ் மாநாட்டு நடத்துனர்கள் ஏற்பாடு  செய்த பேச்சாளர்கள் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலியைச் சாடும்  வகையில் பேசினர்.

தொடர்ந்து, டத்தோஸ்ரீ  சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலுக்கு வழங்கப்பட்ட  சிறப்புத் தலைவர் விருது  ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.

2019 தேசிய மாநாடு தலைமைச் செயலாளரின் மேற்பார்வையிலேயே நடைபெற்றது. அவ்வகையில் சிறப்புத் தலைவர் விருதுக்கு தன்னைத் தானே அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டாரா? இது தனக்குத் தானே புகழாரம் சூட்டிக் கொள்ளும் செயல் அல்லவா?

இந்த விவகாரத்தை நான் மட்டும் எழுப்பவில்லை. மறுமலர்ச்சி போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் இதே கேள்வியையே முன் வைத்துள்ளனர். பாஸ் கட்சிக்குத் தாவிய இவர் 2008 ஆம் ஆண்டில் கெஅடிலான் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மீண்டும் கட்சிக்குத் திரும்பினார். 2013 ஆம் ஆண்டு கூலிம் பண்டார் பாரு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்ட பின்னர் போராட்டத்தில் இருந்து பின் வாங்கினார். இவரையா கட்சியின் சிறப்பு விருது வழங்கி  கௌரவிப்பது?

“தலைவர் அவர்களே, கட்சிக்கு உண்மையாக உழைத்தவர்களை அங்கீகரிப்பீர். நீங்கள் சிறையில் இருந்தபோது கட்சிக்காகப் போராடிய உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களின் தியாகங்களை மறந்துவிடாதீர்கள்” என்று அன்வாருக்கு எழுதிய திறந்த மடலில் குணசேகரன் நினைவுறுத்தினார் .