கோலாலம்பூர், டிச.18-

நாட்டில் சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்களில் அந்நிய நாட்டவர்கள் ஈடுபடுவதை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும். மாறாக, அந்த வாய்ப்புகள் உள்நாட்டினருக்கே வழங்கப்பட வேண்டுமென பிரபல வர்த்தகரான ஹைப்பெர்மார்கெட் மைடின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான டத்தோ அமீர் அலி மைடின் வலியுறுத்தினார்.

சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்களில் அந்நிய நாட்டவர்கள் பரவலாக ஈடுபட்டு வருவதைக் காண முடிகின்றது. அவ்விவகாரத்தில் அரசாங்கம் விட்டுக்கொடுக்கும் போக்கை கடைப்பிடிப்பது வருத்தமளிப்பதாகவும் அவர் கூறினார்.

தலைநகரிலுள்ள ஜாலான் மஸ்ஜிட் இந்தியா, ஜாலான் பெட்டாலிங், ஜாலான் சீலாங், செலாயாங் உள்பட கிள்ளான் பள்ளதாக்கில் பல இடங்களில் அத்தரப்பினர் வர்த்தகங்களில் ஈடுபட்டு வருவதைக் காண முடிகின்றது. தீபகற்ப கிழக்கு கடற்கரை மாநிலங்களிலும் சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்களில் அந்நிய நாட்டவர்களின் ஆதிக்கத்தைக் காண முடிகின்றது.

அத்தரப்பினர் ஆடம்பர கடைகள், மிகப் பெரிய வர்த்தகங்கள் முதலானவற்றில் ஈடுபடுவதில் பிரச்சனைகள் இல்லை. காரணம், அது அனைத்துலக தரத்திலான பொருட்களை உள்நாட்டினர் வாங்குவதற்கு வாய்ப்பாக அமைவதோடு, உள்நாட்டு மக்களுக்கும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும்.

ஆனால், சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்களில் அவர்களுக்கு அனுமதியளிக்கக்கூடாது. உள்நாட்டைச் சேர்ந்த வியாபாரிகளுக்கே அந்த வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்பட வேண்டும். அதன் வாயிலாக, அவர்கள் அதிக இலாபத்தைப் பெற முடியும் என அமீர் அலி மைடின் கூறினார்.

இதனிடையே, அமீரின் அக்கூற்றை வீடமைப்பு மற்றும் ஊராட்சி துணையமைச்சரான செனட்டர் டத்தோ ராஜா கமாருல் பாஹ்ரின் மறுத்தார்.

அந்நிய நாட்டவர்கள் சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்களில் ஈடுபடுவதற்கு ஊராட்சி மன்றங்கள் பெர்மிட்டுகளை வழங்குவதில்லை. ஆனால், உள்நாட்டைச் சேர்ந்த வியாபாரிகளே வெளிநாட்டினருக்கு தங்களது பெர்மிட்டுகளை வாடகை அடிப்படையில் வழங்குவதாக அவர் கூறினார்.