மியன்மார் யங்கூனில் 4ஆவது எழுமீன் (ரைஸ்) மாநாடு!

யங்கூன், டிச 20-

உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் மூன்றாம் உலகத் தமிழ் தொழிலதிபர்கள், திறனாளர்கள் மாநாடு (எழுமின்) சென்னையில் நவம்பர் 14ஆம் தேதி மிக விமர்சையாக நடந்தது.

35 நாடுகளிலிருந்து 1000க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்ட இந்த மூன்று நாள் மாநாட்டில் மலேசியாவிலிருந்து 60க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தகப் பரிமாற்றங்கள், வர்த்தக மேம்பாடு, தமிழர்களின் பொருளாதார வளர்ச்சி குறித்த பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளும் இந்த மாநாட்டில் இடம்பெற்றன. குறிப்பாக வர்த்தகப் பரிமாற்றுத் தளமாக இந்த எழுமின் மாநாடு அமைந்தது

இந்நிலையில் 4ஆவது எழுமீன் மாநாட்டு மியன்மார் யங்கூன் நகரில் 2020 பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெறவிருக்கின்றது. அதன் அறிமுக விழா வியாழக்கிழமை யங்கூன் நகரில் நடந்தது. இதில் எழுமின் இயக்கத்தின் மலேசிய தலைவரும் தேசிய இயக்கத்தின் உதவி தலைவருமான சரவணன் சின்னப்பன் கலந்து கொண்டார்.

வர்த்தக வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ளும் விரும்பும் தமிழ் வர்த்தகர்களுக்கு இது மிகப் பெரிய வாய்ப்பாக அமையுமென சரவணன் குறிப்பிட்டார். மலேசியா, சென்னை ஆகிய தளங்களைக் கடந்து அதிகமான தமிழ்ர்கள் வாழும் யங்கூன் நகரில் எழுமீன் மாநாடு நடைபெறுகின்றது.

உலகம் முழுவதிலுமிருந்து 1000க்கும் அதிகமான தொழிலதிபர்கள், திறனாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் மிகச் சிறப்பாகச் சில ஆசியான் மற்றும் ஐ.நா. அமைப்புகள் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் 4ஆவது எழுமீன் மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டார்கள்.