கேமரன் மலை, டிச. 23-
இங்குள்ள கோலா தெர்லா விவசாயிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காண பகாங் மந்திரி பெசார் வான் ரொஸ்டி வான் தீர்வு காண தவறியதன் காரணமாக மலேசிய இந்திய காங்கிரஸை சார்ந்த அவருடைய சிறப்பு அதிகாரி இன்று பதவி விலகினார். அவருடன் இதர 11 நகராண்மைக் கழக உறுப்பினர்களும் பதவி விலகியுள்ளனர் என மலேசியா கினி செய்தி வெளியிட்டுள்ளது.
கோலா தெர்லா பகுதியில் 60 இந்திய குடும்பங்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்பகுதியில் நீர் ஆதாரத்தில் ரசாயனம் கலக்கப்படுவதாக மாநில அரசாங்கம் கூறி வந்த நிலையில் அவர்களின் விவசாய நிலம் இன்று முற்றாக அழிக்கப்பட்டது.
விவசாயிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என நேற்று மாநில மந்திரி பெசாருடன் சிறப்புச் சந்திப்புக் கூட்டம் நடந்தது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரை மாநில அரசின் அனைத்து பதிவுகளையும் துறப்பதாக நாங்கள் முடிவு செய்து இருக்கின்றோம் என மாநில மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரி பி ஆறுமுகம் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் மலேசிய இந்திய காங்கிரஸ் ஏமாற்றம் அடைந்துள்ளதாக ஆறுமுகம் குறிப்பிட்டார்.
40 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதி விவசாயம் செய்து வந்தவர்கள் அதே இடத்தில் நிலைத்து இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கவில்லை. அப்பகுதியை விட்டு வெளியேறுவதற்கு மாற்று நிலத்தையே அவர்கள் கேட்டிருந்தார்கள். அதை வழங்குவதில் என்ன பிரச்சனை என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார்.
இருப்பினும் இந்த விவகாரத்தைத் தீர்ப்பதற்கு மாநில மந்திரி பெசார் சிறப்புக் கவனம் செலுத்துவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றும் ஆறுமுகம் கூறினார்.
உள்ளூர்வாசிகளின் நீர் ஆதாரத்தில் ரசாயன மாசு ஏற்படும் காரணத்திற்காக விவசாயிகள் தங்கள் நிலங்களைக் காலி செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இன்று காலை முதல் கோலா தெர்லா விவசாய நிலம் முற்றாக அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது சார்ந்த கானொளிகளும் சமூகத் தளங்களில் வைரலாகப் பரவப்பட்டு வருகின்றது.